துப்பாக்கிச்சுடுதல் போட்டி: இளம் வீராங்கனையின் கோரிக்கையை ஏற்றது யோகி அரசு

துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் கலந்து கொள்ள உள்ள இளம் வீராங்கனையின் கோரிக்கையை யோகி அரசாங்கம் ஏற்றுக்கொண்டது. #YogiAdityanath

Update: 2018-06-09 07:55 GMT
மீரட்,

ஜீனியர் துப்பாக்கிச்சுடுதல் போட்டியில் கலந்து கொள்வதற்கு நிதி உதவி கேட்ட, இளம் வீராங்கனையின் கோரிக்கையை உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.

ஜெர்மனியின் ஷூல் நகரில் நடக்கும் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கிச்சுடும் போட்டி, ஜூன் 22-ந் தேதி முதல் நடைபெற உள்ளது. சர்வதேச துப்பாக்கி சுடுதல் சம்மேளனம் சார்பில் நடக்கும் இந்த தொடரில் பங்கேற்க, இந்தியா சார்பில், உத்தரபிரதேச மாநிலம், மீரட்டை சேர்ந்த பிரியா சிங் என்ற இளம்பெண் தகுதி பெற்றுள்ளார்.

முன்னதாக, ஜெர்மனி சென்று வருவதற்கு போதுமான நிதி வசதி இல்லாததால் மத்திய, மாநில அரசுகளின் உதவியை எதிர்பார்த்து காத்திருந்தார். நிதியுதவி கேட்டு முதல்வருக்கு கடிதம் எழுதி இருந்தார். மேலும் விளையாட்டு துறை அமைச்சரை சந்திக்க இரண்டு முறை சென்றதாகவும், ஆனால் முடியவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இளம் வீராங்கனையின் கோரிக்கையை ஏற்ற உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவருக்கு  ரூ. 4.5 லட்சம் வழங்க ஒப்புதல் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘இந்த சம்பவம் பற்றி எனக்குத் தெரிந்தவுடன், நான் உடனடியாக ரூபாய் 4.5 லட்சம் மாநில அரசின் மூலம் வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளேன். மேலும் மீரட் மாவட்ட நீதிபதி மூலம் அந்த இளம் வீராங்கனையின் பயணத்திற்கான ஏற்பாடுகளை கவனிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று யோகி ஆதித்யநாத் கூறினார்.

மேலும் செய்திகள்