கர்நாடகாவில் ‘நீட்’ தேர்வு தோல்வியால் தமிழக மாணவி தற்கொலை

கர்நாடகாவில் ‘நீட்’ தேர்வு தோல்வியால் தமிழக மாணவி தற்கொலை கொண்டார்.

Update: 2018-06-10 22:15 GMT
பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டம் சண்டூர் அருகே தோனிமலே கிராமத்தில் வசித்து வருபவர் திருமலை. தமிழகத்தை சேர்ந்த இவர் கடந்த பல ஆண்டுகளாக சண்டூரில் தங்கி இருந்து, அங்குள்ள கனிம சுரங்க நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் கோமலவள்ளி (வயது 19), சண்டூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.யூ.சி. 2-ம் ஆண்டு படித்து முடித்தார். பின்னர் மருத்துவம் படிப்பதற்காக ‘நீட்’ தேர்வு எழுதி இருந்தார். ஆனால் அதில் குறைந்த மதிப்பெண்களே எடுத்து தோல்வி அடைந்தார். இதனால் அவர் மனம் உடைந்த நிலையில் காணப்பட்டார். இந்த நிலையில் டி.பி.டேம் பகுதியில் வசித்து வரும் தனது பாட்டி வீட்டுக்கு கோமலவள்ளி தனது பெற்றோருடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்று இருந்தார். அங்கு நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென்று கோமலவள்ளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்று கோமலவள்ளியின் உடலை கைப்பற்றிய டி.பி.டேம் போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்