சர்ச்சையை கிளப்பிய டுவிட்டர் பதிவு: லாலுவின் மகன்களுக்கு இடையே மோதலா?

சர்ச்சையை கிளப்பிய டுவிட்டர் பதிவினால் லாலுவின் மகன்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

Update: 2018-06-11 00:00 GMT
பாட்னா, 

பீகாரில் ராஷ்ட்ரீய ஜனதாதளம் மற்றும் ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் இணைந்து அமைத்து இருந்த முந்தைய கூட்டணி அரசில், லாலு பிரசாத்தின் இளைய மகனான தேஜஸ்வி யாதவுக்கு துணை முதல்-மந்திரி பதவி கொடுக்கப்பட்டு இருந்தது. மூத்த மகனான தேஜ்பிரதாப் யாதவ் சுகாதார மந்திரியாக பதவி வகித்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தேஜ்பிரதாப் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அஸ்தினாபுரம் அரியணையில் அர்ஜுனனை அமர்த்தி விட்டு, கிருஷ்ணரை போல துவாரகைக்கு திரும்புவதுதான் எனது விருப்பம்’ என கூறியிருந்தார். இந்த பதிவு ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியில் சர்ச்சைகளை கிளப்பியது.

கட்சியிலும், ஆட்சியிலும் தனது தம்பியையே முன்னிலைப்படுத்துவதால் தேஜ்பிரதாப், அரசியலில் இருந்து ஓய்வு பெறலாம் என பலரும் கருதினர். மேலும் தேஜ்பிரதாப் மற்றும் தேஜஸ்விக்கு இடையே பிளவு ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் இந்த பதிவு போட்ட சில மணி நேரத்துக்குப்பின் செய்தியாளர்களை சந்தித்த தேஜ்பிரதாப், தான் அரசியலில் தொடர்வதாக கூறினார். லாலு பிரசாத்தின் தற்போதைய உடல்நிலையை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு கட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயல்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையே தனக்கும், தேஜ்பிரதாப்புக்கும் இடையே எந்த மோதலும் இல்லை என தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். அவர் தனது சகோதரர் மட்டுமின்றி வழிகாட்டியும் கூட என்று கூறிய அவர், சிறிய பிரச்சினைகளை பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும் செய்திகள்