திறமை வாய்ந்தவர்களுக்கு மத்திய அரசில் இணைச்செயலாளர் பதவி தனியார் நிறுவன அதிகாரிகளும் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசில் இணைச்செயலாளர் பதவிகளில் நேரடி நியமனம் செய்யப்படுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தனியார் துறை அதிகாரிகளும் விண்ணப்பிக்கலாம்.

Update: 2018-06-10 23:45 GMT
புதுடெல்லி, 

மத்திய அரசு முதல்முதலாக பல்வேறு துறைகளில் இணைச்செயலாளர் பதவிக்கு திறமையும், செயல்நோக்கமும் கொண்டவர்களை நேரடியாக பணி நியமனம் செய்ய முடிவு செய்து உள்ளது. குறிப்பாக தனியார் துறையில் வருவாய், நிதிப்பணிகள், பொருளாதார விவகாரங்கள், விவசாயம், கூட்டுறவு, விவசாயிகள் நலன், சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை, கப்பல், சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், மரபு சாரா எரிசக்தி, சிவில் விமான போக்குவரத்து, வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றி நிபுணத்துவம் பெற்றவர்களை பணி அமர்த்த விரும்புகிறது.

10 இணைச்செயலாளர்களை இப்படி நியமிப்பதற்கு விண்ணப்பங்களை வரவேற்று மத்திய அரசு முன்னணி பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இருக்கிறது. மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சிகள் துறையின் சார்பில் சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த பதவி 3 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையிலானது, 5 ஆண்டுகள் வரை நீட்டிக்கத்தக்கது. எந்த துறையில் பணி அமர்த்தப்படுகிறார்களோ, அந்த துறையின் செயலாளர்கள், கூடுதல் செயலாளர்களுக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள் ஆவார்கள்.

இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 1-ந் தேதி அன்று 40 வயது ஆகி இருக்க வேண்டும், அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தின் பட்டம் பெற்று இருக்க வேண்டும். உயர் தகுதிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்படும்.

அரசு துறையில் அல்லது தனியார் துறையில் பணியாற்றி 15 ஆண்டு முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் அடுத்த மாதம் 30-ந் தேதி ஆகும்.

தேர்ந்தெடுக்கப்படுகிற விண்ணப்பதாரர்கள், தேர்வுக்குழுவினரின் நேரடி கலந்துரையாடலுக்கு அழைக்கப்படுவார்கள்.

இணைச்செயலாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படுகிறவர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.1,44,200-2,18,200 என்ற அளவில் இருக்கும்.

தேர்ந்தெடுக்கப்படுகிறவர்கள் அரசு அதிகாரிகளாக கருதப்பட்டு, பணி நடத்தை விதிகளின் கீழ் கொண்டு வரப்படுவார்கள். பணியில் இருந்து விலக விரும்பினால் 3 மாதத்துக்கு முன்னர் அரசுக்கு முன் அறிவிப்பு செய்ய வேண்டும். பணியில் இருந்து அரசு நீக்க விரும்பினாலும், சம்மந்தப்பட்ட நபருக்கு 3 மாத நோட்டீஸ் வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்