அரசு கல்வி நிறுவனங்களிலும் தனியார் துறையினருக்கு வாய்ப்பு: மத்திய மந்திரி யோசனை

திறமை வாய்ந்தவர்களுக்கு மத்திய அரசின் இணை செயலாளர் பதவி அளிக்கும் திட்டத்தின் கீழ், அரசு கல்வி நிறுவனங்களிலும் அவர்களை நியமிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி சத்யபால் சிங் கூறியுள்ளார்.

Update: 2018-06-11 23:45 GMT
புதுடெல்லி,

பல்வேறு மத்திய அமைச்சகங்களில், இணை செயலாளர் அந்தஸ்துள்ள பதவிகளுக்கு திறமையும், செயல் நோக்கமும் கொண்டவர்களை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு தனியார் துறையை சேர்ந்தவர்களும் விண்ணப்பிக்கலாம். தேச கட்டுமானத்தில் பங்களிப்பு செய்ய விரும்புபவர்கள், இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று முன்னணி நாளிதழ்களில் மத்திய அரசு விளம்பரம் செய்துள்ளது. இது, 3 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியிடம் ஆகும். இதற்கான சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த திட்டத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த திட்டம், பா.ஜனதாவுடன் தொடர்பு உடையவர்களை அரசு நிர்வாகத்தில் நுழைக்கும் நோக்கம் கொண்டது என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், கடும் எதிர்ப்பையும் மீறி, அரசு கல்வி நிறுவனங்களுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்று மத்திய மந்திரி ஒருவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரி சத்யபால் சிங் பேசியதாவது:-

பல்வேறு மத்திய அமைச்சகங்களில், திறமை வாய்ந்தவர்களை இணை செயலாளர் அந்தஸ்தில் நியமிக்கும் திட்டம் நடந்து வருகிறது. இந்த திட்டத்தை அரசு கல்வி நிறுவனங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அதாவது, அத்தகையவர்களை அரசு கல்வி நிறுவனங்களிலும் இணை செயலாளர் அந்தஸ்தில் நியமிக்க வேண்டும். அப்படி செய்தால், கல்வி நிறுவனங்களின் கல்வித்தரம் மேம்பாடு அடையும். இதை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம்.

அரசு கல்வி நிறுவனங்களுக்கும், தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இடையே ஏற்றத்தாழ்வு நிலவுகிறது. இது, படிப்படியாக முடிவுக்கு வரும். அதற்கான பணிகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதுதொடர்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளேன். இதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

தொழில் துறையினர் எதிர்பார்க்கும் திறமையுள்ள மாணவர்களை உருவாக்கும் வகையில், புதிய பாடத்திட்டத்தை வடிவமைக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. பாலிடெக்னிக் கல்லூரிகளுக் கான புதிய பாடத்திட்டம், இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும். வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்படுவது அவசியம். இவ்வாறு சத்யபால் சிங் பேசினார்.

மேலும் செய்திகள்