7 வயது சிறுவனை சிறுத்தை கொன்றதை அடுத்து கிராம மக்கள் காட்டிற்கு தீ வைப்பு

7 வயது சிறுவனை சிறுத்தை கொன்றதை அடுத்து கிராம மக்கள் காட்டிற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-06-12 10:32 GMT
டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் ஹாரினாகாரி பகுதியில் காட்டையொட்டிய கிராமத்திற்குள் புகுந்த சிறுத்தை ஒன்று 7 வயது சிறுவனை கொன்று தின்று உள்ளது. நேற்று இரவு சிறுவன் சிறுநீர் கழிக்க வெளியே சென்ற போது அவனை சிறுத்தை தாக்கி உள்ளது, அவனுடைய அழுகை சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்து ஓடிவந்த அவனுடைய தாயார் கதறி அழுது உள்ளார். சிறுவனை காப்பாற்ற முயற்சித்து உள்ளார். கிராம மக்களும் ஓடி வந்து உள்ளார்கள். சிறுத்தை சிறுவனை இழுத்துக் கொண்டு ஓடி உள்ளது. சிறிது தொலைவில் சிறுவனுடைய பாதி சடலம் மட்டும் காட்டுப்பகுதியில் கிடைத்து உள்ளது. இதனையடுத்து கோபம் அடைந்த கிராம மக்கள் அப்பகுதியில் காட்டிற்கு தீ வைத்து உள்ளனர். இதனால் காட்டுப்பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டு உள்ளது என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே இப்பகுதியில் மார்ச் மாதம் 4 வயது சிறுவனை சிறுத்தை கொன்றதாக பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது, இது இரண்டாவது சம்பவமாகும். சிறுத்தையை பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்