வங்காள விரிகுடா கடலில் சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து: 22 சிப்பந்திகளும் பத்திரமாக மீட்பு

வங்காள விரிகுடா கடலில் சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கப்பலில் இருந்த 22 சிப்பந்திகளும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

Update: 2018-06-14 10:33 GMT
கொல்கத்தா, 

வங்காள விரிகுடா கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த ”எம்.வி எஸ்எஸ்எஸ்எல் கொல்கத்தா” என்ற வணிக சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நேற்று, நள்ளிரவு 55 நாட்டிக்கல் மைல் தொலைவில் கப்பல் இருந்த போது, தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  

இதையடுத்து, இந்திய கடற்படைக்கு சொந்தமான ராஜ்கிரன் என்ற கப்பல் விரைந்து சென்ற, வணிக சரக்கு கப்பலில் சிக்கி தவித்த சிப்பந்திகளை மீட்கும் பணியில் ஈடுபட்டது. காலை 8 மணியளவில் கப்பலை அடைந்த ஐ.என்.எஸ் கப்பல், சரக்கு கப்பலில் சிக்கி தவித்த 22 சிப்பந்திகளையும் பத்திரமாக மீட்டது.

பலத்த காற்று, மற்றும் கடுமையான வானிலை காரணமாக தீ கொழுந்து விட்டு எரிந்தது. 70 சதவீதம் அளவுக்கு கப்பல் சேதம் அடைந்ததால், கப்பல் கைவிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சரக்கு கப்பலானது கிருஷ்ணப்பட்டினத்தில் இருந்து கொல்கத்தாவுக்கு 22 சிப்பந்திகள் (அனைவரும் இந்தியர்கள்) 464 கண்டெய்னர்களுடன் சென்றதாக தகவல்கள் வந்துள்ளன. 

தீ  விபத்துக்குள்ளான கப்பலில் இருந்து எண்ணைய் கசிவு ஏற்படுவதை கட்டுப்படுத்த சென்னை மற்றும் விசாகப்பட்டினத்தில் இருந்து மாசுபாட்டை குறைக்கும் உபகரணங்களுடன் கூடிய கப்பல்  புறப்பட்டுள்ளது. தற்போது, வரை எண்ணை கசிவு ஏற்படவில்லை எனவும் ஒருவேளை ஏற்பட்டாலும், கடற்படை அதை கையாளும் என்று  கடற்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்