“என்னுடைய மதத்தை காப்பாற்றவே கவுரி லங்கேஷை கொன்றேன்” -பரசுராம் வாக்மோர்

“என்னுடைய மதத்தை காப்பாற்றவே கவுரி லங்கேஷை கொன்றேன்” என பரசுராம் வாக்மோர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. #GauriLankesh #ParashuramWaghmore

Update: 2018-06-16 08:31 GMT
பெங்களூரு,  

பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகரை சேர்ந்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், கடந்த ஆண்டு (2017) செப்டம்பர் 5–ந் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து விசாரித்து வரும் சிறப்பு விசாரணை குழுவினர், ஏற்கனவே மண்டியா மாவட்டம் மத்தூரை சேர்ந்த நவீன்குமார் என்பவரை கைது செய்துள்ளனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கவுரி லங்கேஷ் கொலையில் தொடர்பு இருப்பதாக கூறி சுஜீத்குமார் என்கிற பிரவீன், அமோல் காலே, பிரதீப், மனோகர் ஆகிய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் மராட்டிய மாநிலத்தில் பதுங்கி இருந்த விஜயாப்புரா மாவட்டம் சிந்தகியை சேர்ந்த பரசுராம் வாக்மோர் என்பவரை சிறப்பு விசாரணை குழு போலீசார் கைது செய்துள்ளனர். அவர் இந்து அமைப்பை சேர்ந்தவர் என்று தெரிந்தது. கைதான பரசுராம் வாக்மோரை 14 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கவுரி லங்கேசை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது நான் தான் என்பதை போலீசாரிடம் பரசுராம் வாக்மோர் ஒப்புக் கொண்டுள்ளார்.

வாடகை வீட்டில் தங்கிய...

மேலும் தடயவியல் பரிசோதனையில் கவுரி லங்கேசை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியில் இருப்பது பரசுராம் வாக்மோரின் கைரேகை தான் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் கவுரி லங்கேசை சுட பயன்படுத்திய துப்பாக்கிதான், பகுத்தறிவாளர்கள் கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கலபுரகி ஆகியோரை கொல்லவும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில், பரசுராம் வாக்மோர் பெங்களூரு காமாட்சி பாளையா அருகே சுங்கதகட்டேயில் உள்ள சுரேஷ் என்பவருக்கு சொந்தமான வாடகை வீட்டில் தங்கி இருந்து கவுரி லங்கேசை தீர்த்து கட்டியதும் தெரிந்தது.

10 நாட்கள் அந்த வீட்டில் தங்கி இருந்த அவர், கவுரி லங்கேஷ் கொலை செய்யப்பட்ட மறுநாளே வீட்டை காலி செய்திருந்தார். இதையடுத்து, சுங்கதகட்டேவுக்கு பரசுராம் வாக்மோரை போலீசார் அழைத்து சென்று நேற்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் சில மர்மநபர்கள் செல்போனில் தொடர்பு கொண்டு பேசி தகவல்களை தெரிவித்ததாகவும், அதன்படியே தான் நடந்து கொண்டதாகவும் போலீசாரிடம் கூறினார். மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் சில முக்கிய தகவல்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது.

பெயரில் இல்லாத இந்து இயக்கம் 

அதாவது கவுரி லங்கேஷ் கொலைக்கு காரணமாக பெயர் இல்லாமல் ஒரு இந்து இயக்கம் செயல்பட்டு வந்ததும், அந்த இயக்கத்தில் கர்நாடகம், மத்தியபிரதேசம், குஜராத், மராட்டியம், கோவா ஆகிய 5 மாநிலங்களை சேர்ந்த 60 பேர் உறுப்பினர்களாக இருந்து, இயங்கி வருவது பற்றி தெரியவந்துள்ளதாகவும் சிறப்பு புலனாய்வு குழு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த இந்து இயக்கத்தில் பரசுராம் வாக்மோர் இருந்ததும், இயக்கத்தில் இருப்பவர்கள் கூறியபடியே கவுரி லங்கேசை அவர் சுட்டுக் கொன்றதும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், கவுரி லங்கேஷ் கொலையில் கைதாகி உள்ள பரசுராம் வாக்மோருக்கும் ஸ்ரீராமசேனை அமைப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று, அந்த அமைப்பின் தலைவர் பிரமோத் முத்தாலிக் கூறியுள்ளார். அதே நேரத்தில் பரசுராம் வாக்மோருக்கு ஆதரவாக ஸ்ரீராமசேனை அமைப்பை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இது கர்நாடகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதத்தை காப்பாற்ற 

இந்நிலையில் “என்னுடைய மதத்தை காப்பாற்றவே கவுரி லங்கேஷை கொன்றேன்” என பரசுராம் வாக்மோர் விசாரணை அதிகாரிகளிடம் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

“மதத்தை காப்பாற்ற ஒருவரை கொல்ல வேண்டும் என்று எனக்கு 2017 மே மாதம் தகவல் வந்தது. இதனையடுத்து எனக்கு கோபம் ஏற்பட்டது. நான் யாரை கொலை செய்யப்போகிறேன் என்று எனக்கு தெரியாது. பெண்ணை கொன்று இருக்கக்கூடாது என்பதை இப்போது நான் உணர்கிறேன்,” என்று விசாரணை அதிகாரிகளிடம் பரசுராம் வாக்மோர் கூறியதாக விசாரணை குழு தகவல்கள் தெரிவிப்பதாக ஆங்கில பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.

பெங்களூருவிற்கு 2017 செப்டம்பர் 3-ம் தேதி வந்தேன், பெல்காவியில் துப்பாக்கி சூடு பயிற்சி பெற்றேன் என பரசுராம் வாக்மோர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் செய்திகள்