ஆந்திரா சிவன் கோவிலில் பூஜை செய்து கொண்டிருக்கும் போதே உயிரிழந்த அர்ச்சகர்

ஆந்திராவில் சிவன் கோவிலில் அர்ச்சகர் ஒருவர் சுவாமிக்கு பூஜை செய்து கொண்டிருக்கும் போதே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2018-06-16 09:25 GMT
கோதாவரி,

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் உள்ள சோமேஸ்வரர் கோவிலில் தலைமை அர்ச்சகராக பணிபுரிந்து வருபவர் வெங்கட ராமா ராவ். இவர் கடந்த 11-ம் தேதி காலை 6 மணிக்கு வழக்கம் போல் கோவில் நடையை திறந்து விட்டு ஆகம விதிப்படி சிவலிங்கத்திற்கு பூஜை செய்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கிழே விழுந்தார். 

அங்கு இருந்த உதவி அர்ச்சகர் அவரை எழுப்பி நிற்க வைத்தார். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் சிவன் சிலை மீது விழுந்தார். இதனால் பதறிப்போன உதவி அர்ச்சகர் கோவில் நிர்வாகிகளை வரவழைத்து வெங்கட ராமா ராவை மருத்துவமனையில் அனுமதித்தனர். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து வெங்கட ராமா ராவ் பேரன் கேத்தபல்லி ராம் கூறுகையில், என்னுடைய தாத்தா கடந்த 45 ஆண்டுகளாக சோமேஸ்வரருக்கு பூஜை செய்து வருகிறார். அவர் ஒரு இதய நோயாளியாக இருந்தாலும் சம்பவத்தன்று அவர் வழக்கம் போல கோவிலுக்கு சென்றார் என கூறினார்.

வெங்கட ராமா ராவ் மறைவு குறித்து அந்த கிராம மக்கள் கூறுகையில், 

ராமா ராவ் தந்தை கடந்த 1983-ம் ஆண்டு சிவராத்திரி அன்று சாமி சிலை மீது உயிரிழந்தார் என தெரிவித்தனர். சோமேஸ்வரர் கோவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள 5 சிவன் கோவில்களில் இதுவும் ஒன்று. இந்த கோவில் சாளுக்கிய வம்சத்தின் அரசர் பீமன்ஷ்வராவால் புதுப்பிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சாளுக்கியர்கள், கஜபதி அரசர்கள் மற்றும் விஜயநகர அரசர்களின் ஆட்சியின் போது இந்த கோயில் பெரும் புகழ்பெற்று விளங்கியது என அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்