30 அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் சுங்கவரியை விதிக்க இந்தியா அதிரடி நடவடிக்கை

30 அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் சுங்கவரியை விதிக்க இந்தியா அதிரடி நடவடிக்கையை முன்னெடுத்து உள்ளது.

Update: 2018-06-16 12:15 GMT
புதுடெல்லி,  

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஆட்சியமைந்த பின்னர், சீனப்பொருட்கள் மீதான நடவடிக்கையை தொடங்கினார். இதனையடுத்து இருநாடுகள் இடையே வர்த்தகப்போர் தொடங்கியது, இரு நாடுகளும் போட்டி போட்டு பரஸ்பரம் தங்களது நாடுகள் இறக்குமதி செய்யும் அத்தியாவசிய பொருட்களுக்கான வரிவிதிப்பை அதிகரித்து வருகின்றன. இவ்வரிசையில் இப்போது இந்தியாவும் இணைந்து உள்ளது. அமெரிக்காவின் டிரம்ப் நிர்வாகம், கனடா, மெக்சிகோ நாடுகளில் தவிர மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முக்கிய பொருட்களுக்கான வரி விகிதத்தை கடுமையாக உயர்த்தியது. இதனால் இந்தியாவும் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது.

இதனை சமாளிக்கும் பொருட்டு இந்தியா, அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 30 விதமான பொருட்களுக்கு சுங்கவரியை அதிகரிக்க நடவடிக்கையை முன்னெடுத்து உள்ளது.  

 அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார் சைக்கிள், இரும்பு மற்றும் உருக்கு பொருட்கள், போரிக் அமிலம், பருப்பு வகைகள் உள்ளிட்ட 30 வித பொருட்களுக்கு இந்தியா கூடுதல் சுங்கவரியை விதிக்க முடிவு செய்தது. அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50 சதவீத கூடுதல் சுங்கவரியை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கையை தொடர்ந்து அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதாம் பருப்பு, ஆப்பிள், மோட்டார் சைக்கிள்கள் உள்ளிட்ட 20 வகையான பொருட்களுக்கு 10 முதல் 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க ஏற்கனவே இந்தியா முடிவு செய்தது.

இப்போது மத்திய அரசு எடுத்துள்ள சுங்க வரி உயர்வு பற்றிய தகவலை பட்டியலாக உலக வர்த்தக அமைப்பிடம் தாக்கல் செய்து உள்ளது.

1994–ம் ஆண்டு உலக நாடுகள் இடையே செய்து கொள்ளப்பட்ட வர்த்தக ஒப்பந்தத்தின்படி உலகளாவிய வர்த்தகம் தொடர்பாக எடுக்கப்படும் முடிவுகள்  உலக வர்த்தக அமைப்பிடம் தெரிவிக்கப்படவேண்டும், அதன்படி இந்தியா தன்னுடைய பட்டியலை தாக்கல் செய்து உள்ளது.

மேலும் செய்திகள்