தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பதவி விலகல், மீண்டும் அமெரிக்கா செல்கிறார்

தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பதவி விலகினார், அவர் மீண்டும் அமெரிக்காவிற்கு செல்கிறார். #ArvindSubramanian #ArunJaitley

Update: 2018-06-20 10:37 GMT

புதுடெல்லி,

கடந்த சில நாட்களாகவே டெல்லி வட்டாரங்களில் தலைமை பொருளாதார ஆலோசகர் பொறுப்பிலிருந்து அரவிந்த் சுப்ரமணியன் ராஜினாமா செய்யப்போவதாக செய்திகள் வெளியாகியது. இப்போது தலைமை பொருளாதார ஆலோசகர் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். சொந்த காரணங்களுக்காக பொறுப்பிலிருந்து விலகுவதாக அரவிந்த் சுப்ரமணியன் குறிப்பிட்டார். 
 
ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கி ஆளுநராக பொறுப்பேற்றதும், காலியாக இருந்த தலைமை பொருளாதார ஆலோசகர் பொறுப்பில், அரவிந்த் சுப்ரமணியன் கடந்த 2014 அக்டோபர் மாதம் நியமனம் செய்யப்பட்டார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் அரவிந்த் சுப்ரமணியத்தின் பதவிக்காலம் முடிவடைய இருந்த நிலையில், இன்னும் ஓராண்டு அப்பதவியில் இருப்பார் என்று மத்திய அரசு தெரிவித்தது. இப்போது பொறுப்பை ராஜினாமா செய்து உள்ளார். இதனை மத்திய நிதிமந்திரி அருண் ஜெட்லியும் உறுதிசெய்துள்ளார். 

சில நாட்களுக்கு முன்னர் அர்விந்த் சுப்ரமணியன் வீடியோ கான்பரன்சிங் மூலமாக என்னை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது,  குடும்பம் சார்ந்த வேலைகள் இருப்பதாகவும் அதனால் திரும்ப அமெரிக்காவே செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார். அவர் கூறிய சொந்த காரணங்கள் அவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்ததால் அவர் எடுத்த முடிவை என்னால் தடுக்க முடியவில்லை. அதான் அவரது ராஜினாமா முடிவை நான் ஏற்றுக் கொண்டேன் என்று நிதிமந்திரி அருண் ஜெட்லி குறிப்பிட்டுள்ளார். 

டெல்லியில் உள்ள ஸ்டீபன்ஸ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அரவிந்த் சுப்ரமணியன் ஐஐடி அகமதாபாத்தில் தனது மேற்படிப்பை நிறைவு செய்தார். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திலும் அரவிந்த் சுப்ரமணியன் பயின்றுள்ளார். முன்னதாக, தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து அரவிந்த் சுப்பிரமணியனை நீக்க வேண்டும் என்று பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தியிருந்தார். ஏற்கெனவெ பேராசிரியரராக பணியாற்றி வந்த அரவிந்த் சுப்ரமணியன் மீண்டும் அதே பணியை தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்