காப்பீடு செய்யாமல் 40 சதவீத வாகனங்கள்... சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு அதிர்ச்சி தகவல்

வாகனத்திற்கு 3-வது நபர் காப்பீடு செய்யப்பட்டு இருப்பது பற்றி, இ-கேமராக்கள் உதவியுடன் கண்காணிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Update: 2024-05-18 09:02 GMT

புதுடெல்லி,

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரை சேர்ந்த வழக்கறிஞர் கிஷன் சந்த் ஜெயின். கடந்த ஆண்டு தாக்கல் செய்த மனு ஒன்றின் மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடந்தது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, நாட்டின் சாலைகளில் 40 சதவீத வாகனங்கள் காப்பீடு செய்யாமல் ஓடுகின்றன என தெரிவித்து இருந்தது.

அதில், விரிவான விபத்து அறிக்கை அளித்த தகவலின்படி, சாலை விபத்துகளில் சிக்க கூடிய 60 சதவீத வாகனங்களே 3-வது நபர் காப்பீடு செய்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், 3-வது நபர் காப்பீடு இல்லாத வாகனங்களால் ஏதேனும் விபத்து ஏற்பட்டால், அதில் பாதிக்கப்பட்ட நபருக்கு, காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு கோர முடியாது. ஆனால், வாகன உரிமையாளருக்கு எதிராக கட்டாயம் சட்ட நடவடிக்கையை தொடர வேண்டும். இது மிக சிக்கலானது மற்றும் கடினம் வாய்ந்தது.

இதுபற்றி வழக்கறிஞர் ஜெயின் அளித்த மனுவில், ஒரு வாகனத்திற்கு 3-வது நபர் காப்பீடு செய்யப்பட்டு இருக்க வேண்டும். அப்படி செய்யப்பட்டு இருப்பது பற்றி, இ-கேமராக்கள் உதவியுடன் கண்காணிப்பு செய்ய வேண்டும். அப்படி காப்பீடு இல்லையெனில், அபராதம் விதிக்க வேண்டும்.

எந்த வாகனங்கள் காப்பீடு செய்யப்பட்டு உள்ளன மற்றும் காப்பீடு செல்லுபடியாகும் காலம் போன்றவை பற்றி போக்குவரத்து அமைச்சகத்திடம் தகவல் இருக்கும். இ-கேமரா கொண்டு கண்காணிக்கும்போது, எளிதில் காப்பீடற்ற வாகனங்களுக்கு அபராதம் விதிக்க முடியும் என ஜெயின் தெரிவித்து இருக்கிறார்.

சட்டப்படி ஒவ்வொரு வாகனத்திற்கும், 3-வது நபர் காப்பீடு வைத்திருக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், பிரிவு 196-ன்படி தண்டனை விதிக்க வழிவகை செய்யும். இதனால், 3 மாத காலம் சிறை தண்டனை அல்லது முதல் குற்றத்திற்கு ரூ.2 ஆயிரம் அபராதமும் மற்றும் தொடர் குற்றங்களுக்கு 3 மாத காலம் சிறை தண்டனை அல்லது ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்க முடியும்.

இருந்தபோதும், காப்பீடு இல்லாமல் வாகன ஓட்டிகள் தொடர்ந்து வாகனங்களை இயக்கி வருகின்றனர் என அவர் சுட்டி காட்டியுள்ளார். இந்த விவகாரம் மக்களவையிலும் முன்பு எழுப்பப்பட்டது. இதில், நாட்டில் மத்திய பிரதேசம், ஆந்திர பிரதேசம் மற்றும் லட்சத்தீவு தவிர்த்து, 30.4 கோடி வாகனங்களில், 16.5 கோடி வாகனங்கள் காப்பீடு இல்லாமல் உள்ளன என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்