இந்திய அழகியாக சென்னை கல்லூரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் தேர்வு உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்வார்

இந்திய அழகியாக சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2018-06-20 23:45 GMT
மும்பை, 

‘மிஸ் இந்தியா’ எனப்படும் இந்திய அழகியை தேர்வு செய்வதற்கான போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதில் வெற்றி பெறுபவர், உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க முடியும்.

இந்த ஆண்டுக்கான ‘மிஸ் இந்தியா’ அழகிப்போட்டி மும்பையில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் சென்னையை சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் (வயது 19) என்ற கல்லூரி மாணவி உள்பட நாடு முழுவதிலும் இருந்து 30 இளம்பெண்கள் கலந்துகொண்டனர். இதில் பல்வேறு சுற்றுகளை கடந்து நேற்று முன்தினம் இறுதிப்போட்டி நடந்தது.

இதில் சென்னை கல்லூரி மாணவி அனுக்ரீத்தி வாஸ் வெற்றி பெற்று மிஸ் இந்தியாவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு உலக அழகியும், முன்னாள் இந்திய அழகியுமான மனுஷி சில்லார் மகுடம் சூட்டினார்.

அரியானாவை சேர்ந்த மீனாட்சி சவுத்ரி (21), ஆந்திராவை சேர்ந்த ஸ்ரேயா ராவ் (23) ஆகியோர் முறையே 2-வது மற்றும் 3-வது இடங்களை பெற்றனர்.

இந்த நிகழ்ச்சியை பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர், நடிகர் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் தொகுத்து வழங்கினர். கிரிக்கெட் வீரர்கள் கே.எல்.ராகுல், இர்பான் பதான், நடிகர்கள் பாபி தியோல், குணால் கபூர், நடிகை மலைகா அரோரா ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர்.

வண்ணமயமாக அரங்கேறிய இந்த நிகழ்வில் பாலிவுட் நடிகைகள் கரீனா கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், மாதுரி தீட்சித் ஆகியோர் நடனம் ஆடினர்.

சென்னையை சேர்ந்த அனுக்ரீத்தி வாஸ் லயோலா கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு பிரெஞ்சு இலக்கியம் படித்து வருகிறார். நடிகர் விக்ரமை தனது முன்மாதிரியாக கொண்டிருந்த இவர், அவரது அர்ப்பணிப்பால் உந்தப்பட்டு லயோலா கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

பயணம் செய்வதில் விருப்பம் கொண்டிருக்கும் அனுக்ரீத்தி, மாநில அளவிலான தடகள வீராங்கனை மற்றும் நடனக்கலைஞர் ஆவார். இவர் ஏற்கனவே ‘மிஸ் தமிழ்நாடு’ பட்டத்தை வென்றதன் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து இருந்தார்.

தற்போது இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனுக்ரீத்தி வாஸ், இந்த ஆண்டு நடைபெறும் உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்பார். இதைப்போல 2-வது மற்றும் 3-ம் இடம் பெற்றவர்கள் முறையே சர்வதேச அழகி மற்றும் கண்டங்களுக்கு இடையேயான அழகி போட்டிகளில் பங்கேற்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வெற்றிக்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய அனுக்ரீத்தி வாஸ், ‘இந்திய அழகி பட்டம் வென்றதை இன்னும் என்னால் நம்ப முடியவில்லை. இந்த தருணத்துக்காகத்தான் நீண்ட காலமாக காத்திருந்தேன். வெற்றி, தோல்வி குறித்து கவலைப்படாமல் இருந்ததால், இந்த நாட்களில் எவ்வித கவலையும் எனக்கு ஏற்படவில்லை. இந்த மகுடத்தை ஏந்த வேண்டும் என்ற எனது காத்திருப்பு தற்போது நிறைவேறி இருக்கிறது’ என்று கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், ‘17 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு உலக அழகிப்பட்டத்தை மனுஷி சில்லார் பெற்றுத்தந்தார். அதை இங்கிருந்து எடுத்துச்செல்ல நான் விரும்பவில்லை. அந்த பட்டம் இந்தியாவிலேயே தொடர்ந்து இருக்கும் வகையில் உலக அழகி பட்டத்தை வெல்வேன்’ என்று தெரிவித்தார்.

ஐஸ்வர்யா ராய் உலக அழகி பட்டம் பெற்றதை தொலைக் காட்சியில் பார்த்து, தனக்கும் அழகிப்போட்டியில் பங்கேற்கும் ஆர்வம் ஏற்பட்டதாக கூறிய அனுக்ரீத்தி, சென்னைக்கு திரும்புவதற்கு ஆவலோடு காத்திருப்பதாகவும், தமிழகத்தில் இருந்து ஒருவர் முதன்முதலாய் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டதால் அது பெருமைமிகு தருணமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார். 

மேலும் செய்திகள்