ராஜஸ்தானில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 முறை பால் வழங்க முடிவு

ராஜஸ்தானில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான அரசு பள்ளி மாணவர்களுக்கு வாரத்திற்கு 3 முறை பால் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

Update: 2018-07-02 16:11 GMT

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தானின் முதல் மந்திரி வசுந்தரா ராஜே தேமி கலான் பகுதியில் அன்னபூர்ணா பால் விநியோக திட்டத்தினை இன்று தொடங்கி வைத்துள்ளார்.  இத்திட்டத்தின்படி, அரசு பள்ளி கூடங்கள் மற்றும் மதரசாக்களில் படித்து வரும் 62 லட்சம் மாணவ மாணவிகளுக்கு வாரம் 3 முறை பால் வழங்கப்படும்.

இதுபற்றி வசுந்தரா கூறும்பொழுது, நானும் ஒரு தாய்.  குழந்தைகள் வளர்ந்து, ஆரோக்கியமுடன் உள்ள நிலையில் அதனை காண்பதில் உள்ள மகிழ்ச்சி எனக்கு தெரியும் என கூறியுள்ளார்.

இந்த திட்டம் ரூ.218 கோடி பட்ஜெட்டில் அமல்படுத்தப்பட உள்ளது.  இதற்காக 5 லட்சம் லிட்டர் பால் பள்ளி கூடங்களுக்கு வழங்கப்படும்.  காலை இறை வணக்கத்திற்கு பின் 1 முதல் 5 வகுப்பு வரையுள்ள மாணவ மாணவியருக்கு 150 மி.லிட்டர் பாலும், 6 முதல் 8 வகுப்பு வரையுள்ள மாணவ மாணவியருக்கு 200 மி.லிட்டர் பாலும் வழங்கப்பட உள்ளது.

இத்திட்டம் திறமையான வகையில் அமல்படுத்தப்படுகிறது என்பதனை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர் என்று வசுந்தரா தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்