ஜோதிட நம்பிக்கையால் தினமும் 350 கி.மீட்டர் பயணம் மேற்கொள்ளும் கர்நாடக மந்திரி

கர்நாடகத்தில் மந்திரி ரேவண்ணா துரதிர்ஷ்டத்தில் இருந்து தப்பிக்க ஜோதிடர் ஆலோசனைப்படி தினமும் 350 கி.மீட்டர் தொலைவுக்கு பயணம் செய்கிறார்.

Update: 2018-07-05 07:29 GMT

பெங்களூரு,

கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.  முதல் மந்திரியாக எச்.டி. குமாரசாமி பதவி வகிக்கிறார்.  இவரது அமைச்சரவையில் குமாரசாமியின் மூத்த சகோதரர் எச்.டி. ரேவண்ணா பொது பணி துறை மந்திரியாக இருக்கிறார்.

ஹசன் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் தினமும் பெங்களூரு மற்றும் தனது தொகுதிக்கு உட்பட்ட ஹோலநரசிபுரா பகுதிகளுக்கு இடையே 350 கி.மீட்டர் தொலைவுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இவருக்கு இன்னும் அரசு இல்லம் ஒதுக்கப்படாததே இதற்கு காரணம் என கூறப்பட்டது.

ஆனால், அதுவரை இவர் தனது சொந்த வீட்டிலோ அவரது குடும்பத்திற்கு சொந்தமுடைய வீடுகளில் ஒன்றிலோ ஏன் தங்கவில்லை என கேள்வி எழுந்தது?  இந்நிலையில், மந்திரியாக இருக்கும்வரை பெங்களூருவில் சொந்த வீட்டில் தங்க கூடாது என ஜோதிடர் ஒருவர் இவருக்கு அறிவுறுத்தி உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது.

ஜோதிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவரான ரேவண்ணா நல்ல நேரம் மற்றும் நாட்கள் அடிப்படையில் எந்த செயலையும் மற்றும் முடிவையும் எடுப்பவராகவும் உள்ளார்.

அவருக்கு, சொந்த வீட்டில் இரவில் தங்குவது துரதிர்ஷ்டம் அளிக்கும் என ஜோதிடர் கூறியுள்ளார்.  அமைச்சராக பதவியேற்ற நேரம் அடிப்படையில் இந்த அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.  இதனை அப்படியே ரேவண்ணா கடைப்பிடித்து வருகிறார்.

அவர் தினமும் காலை 5 மணிக்கு எழுகிறார்.  பூஜை செய்கிறார்.  பின் தொகுதி மக்களை சந்திக்கிறார்.  பெங்களூருவுக்கு 8 மணிக்கு புறப்படும் அவர் 11.30 மணிக்கு சென்று சேர்கிறார்.  பின்னர் ஹசன் நகருக்கு இரவு 9 மணிக்கு புறப்பட்டு நள்ளிரவில் திரும்புகிறார்.

இதற்காக அவர் பயன்படுத்தும் காருக்கான செலவை அரசு ஏற்கிறது.  நல்ல நேர பயணத்திற்காக போக்குவரத்து இடையூறு இல்லாத வகையில் வழி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கின்றது.

மேலும் செய்திகள்