கட்சியை ‘ஜாமீன் வண்டி’ என்று மக்கள் அழைக்கிறார்கள், காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஜாமீனில் உள்ளனர்: பிரதமர் மோடி விமர்சனம்

காங்கிரஸ் தலைவர்கள் பலர் ஜாமீனில் உள்ளனர். அதனால் அக்கட்சியை ஜாமீன் வண்டி என்று மக்கள் அழைக்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

Update: 2018-07-08 00:00 GMT
ஜெய்ப்பூர், 

பிரதமர் நரேந்திர மோடி நேற்று ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.2,100 கோடி மதிப்பிலான 13 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் கட்சியின் ஜாம்பவான்களாக கருதப்படுபவர்களும், முன்னாள் மந்திரிகளும் தற்போது ஜாமீனில் உள்ளனர். காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மக்களுக்கு தெரியும். அதனால், அந்த கட்சியை ‘ஜாமீன் வண்டி’ என்று மக்கள் அழைக்கிறார்கள்.

கடந்த 2016-ம் ஆண்டு நமது ராணுவ வீரர்கள் துல்லிய தாக்குதல் நடத்தினர். ராணுவ வீரர்களின் வலிமையை நம்பாமல், அதுபற்றி காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியது. இத்தகைய பாவத்தை செய்த காங்கிரசை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். இதற்கு முன்பு யாருமே இப்படி நடந்து கொண்டதில்லை.

காங்கிரஸ் கட்சி குடும்ப அரசியலையும், பரம்பரை அரசியலையும் பின்பற்றி வருகிறது. ஆனால், நாம் நாட்டின் சுயமரியாதையை உயர்த்துவதில் உறுதி பூண்டுள்ளோம்.

நாடு இப்போது முக்கியமான காலகட்டத்தில் உள்ளது. புதிய இலக்கை நோக்கி நாம் முன்னேறி வருகிறோம். மக்களின் ஒத்துழைப்போடு, நமது உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்.

சிலர் பா.ஜனதாவின் பெயரை கேட்டாலே பதற்றம் அடைகிறார்கள். மோடி அல்லது வசுந்தரா ராஜே பெயர் குறிப்பிடப்பட்டாலே, அவர்களுக்கு காய்ச்சல் வந்து விடுகிறது. அவர்களுக்கு இத்தகைய நிகழ்ச்சிகள் பிடிக்காது. ஆனால், சாதாரண மக்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளால்தான், அரசின் திட்டங்களை பற்றி தெரிந்து கொள்கிறார்கள்.

பா.ஜனதாவின் ஒரே செயல்திட்டம், வளர்ச்சிதான். ஏழைகள், விவசாயிகள், பெண்கள் ஆகியோரை மனதில் வைத்துத்தான் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், மாநில கவர்னர் கல்யாண்சிங், மத்திய மந்திரி ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், முதல்-மந்திரி வசுந்தரா ராஜே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நலத்திட்ட பயனாளிகளும், விவசாயிகளும் பிரதமருடன் உரையாடினர்.

இதற்கிடையே, பிரதமரின் பேச்சுக்கு காங்கிரஸ் கட்சி பதில் அளித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஆர்.பி.என்.சிங் கூறியதாவது:-

ராஜஸ்தான் உள்பட பல்வேறு மாநிலங்களில் பா.ஜனதா தலைவர்கள் மீது ஊழல் புகார்கள் உள்ளன. ஆனால், விசாரணை நடத்தப்படவில்லை. அம்மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பிறகு, அதுபற்றி உரிய விசாரணை நடத்தப்படும். அதன்பிறகு, பா.ஜனதா மந்திரிகள், பா.ஜனதா தலைவர் அமித் ஷாவின் மகன் உள்ளிட்டோர் ஜாமீனில் இருக்க மாட்டார்கள். ஜெயிலில் தள்ளப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்