2014-ம் ஆண்டில் ‘சுஷ்மா சுவராஜ்தான் பிரதமராகி இருக்க வேண்டும்’: ப.சிதம்பரம் கருத்து

2014-ம் ஆண்டில் சுஷ்மா சுவராஜ்தான் பிரதமராகி இருக்க வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Update: 2018-07-08 23:30 GMT
புதுடெல்லி, 

பா.ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், வெளியுறவு மந்திரியுமான சுஷ்மா சுவராஜ்தான் 2014-ம் ஆண்டில் பிரதமராகி இருக்க வேண்டும் என முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இது குறித்து ஆங்கில பத்திரிகை ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், ‘2009-14-ம் ஆண்டு காலத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் சுஷ்மா சுவராஜ். ஒரு பாராளுமன்ற ஜனநாயகத்தை கடைப்பிடிக்கும் நாட்டில் தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றால், முந்தைய ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர்தான் பிரதமராக வேண்டும் என்பது இயற்கையாகவே உள்ள வாய்ப்பு ஆகும். அந்தவகையில் கடந்த தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றதால், சுஷ்மாதான் பிரதமராகி இருக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

ஆனால் பா.ஜனதாவின் தலைவராவதற்காக, மிகச்சிறந்த சக்தி மற்றும் அரசியல் திறனுடன் வெளியில் இருந்து ஏற்கனவே புகுந்த ஒருவர் (மோடி), பா.ஜனதா வெற்றி பெற்றவுடன் பிரதமர் ஆகி விட்டார் என்றும், எல்.கே.அத்வானியும், சுஷ்மாவும் மோடியை எதிர்த்து தோல்வியடைந்தாகவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டு உள்ளார்.

வெளியுறவு மந்திரியாக சுஷ்மா சுவராஜ் சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறியுள்ள ப.சிதம்பரம், வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க அவரைப்போல ஒரு நல்ல சமானியன் வேண்டும் எனவும் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்