ஜனநாயக ஈடுபாடு கொண்ட காங்கிரஸ் அம்பேத்காருக்கு ஏன் பாரத ரத்னா வழங்கவில்லை? சுப்ரமணியன் சுவாமி கேள்வி

ஜனநாயகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட காங்கிரஸ் கட்சி அம்பேத்காருக்கு ஏன் பாரத ரத்னா வழங்கவில்லை என சுப்ரமணியன் சுவாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2018-07-09 09:12 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மகாராஷ்டிரா தலைவராக பொறுப்பு வகித்து வருபவர் மல்லிகார்ஜுன கார்கே.  இவர் செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 70 வருடங்களாக நாட்டுக்கு காங்கிரஸ் என்ன செய்துள்ளது? என கேட்கிறார்.

இவரை (மோடி) போன்ற தேநீர் விற்பவர் எல்லாம் பிரதமராக முடிகிறது.  ஏனெனில் நாங்கள் ஜனநாயகத்தினை பாதுகாத்துள்ளதே இதற்கு காரணம் என கூறியுள்ளார்.

இதற்கு பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான எம்.பி. சுப்ரமணியன் சுவாமி தொலைக்காட்சி சேனல் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், இந்திய பிரதமரை குறிப்பிடும் வழி இதுவல்ல.  தேநீர் விற்கும் குடும்பத்தில் நரேந்திர மோடி பிறந்திருக்கலாம்.  அவர் முழு அளவில் பயிற்சி மற்றும் கல்வி அறிவு பெற்றவர்.  ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக இருந்திருக்கிறார்.  இது சிறிய சாதனை அல்ல.

குஜராத்தில் பாரதீய ஜனதா கட்சியை ஸ்திரப்படுத்த அவர் உழைத்திருக்கிறார்.  ஆக, கார்கே பிரதமரிடமும் மற்றும் தேசத்திடமும் மன்னிப்பு கோர வேண்டும்.  காங்கிரஸ் கட்சியானது ஜனநாயகத்தில் அதிக அளவில் ஈடுபாட்டுடன் உள்ளதென்றால், டாக்டர் பி.ஆர். அம்பேத்காருக்கு ஏன் பாரத ரத்னா வழங்கவில்லை? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்