துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் சிரித்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்ட சுரேஷ்கோபி

துக்கம் விசாரிக்க சென்ற இடத்தில் சுரேஷ்கோபி அங்கு கூடியிருந்த மக்களுடன் செல்ஃபி எடுத்த சம்பவம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது. #SureshGopi #BJP

Update: 2018-07-09 17:36 GMT
திருவனந்தபுரம்,

கேரளாவில் எர்ணாகுளம் நகரில் மகாராஜா கல்லூரி அமைந்துள்ளது.  இந்த கல்லூரியின் வளாகத்தில் இந்திய மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவரான கல்லூரி மாணவர் அபிமன்யூ (வயது 20) என்பவரை கேம்பஸ் பிரன்ட் மற்றும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) ஆகிய அமைப்புகளின் தொண்டர்கள் குத்தி கொலை செய்தனர்.  இந்த தாக்குதலில் வேறு 2 மாணவர்களும் காயமடைந்து உள்ளனர்.

அவர்களில் ஒருவரது நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.  இந்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய அமைப்பின் 3 பேரை போலீசார் கைது செய்து காவலுக்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில்,   மலையாள நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய சுரேஷ்கோபி வட்ட வட பஞ்சாயத்து கொட்டக்கம்பூரில் உள்ள அபிமன்யூ வீட்டுக்கு ஆறுதல் கூறுவதற்காகச் சென்றுள்ளார்.  அங்கு அபிமன்யூ-வின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அவர் போலீஸ் விசாரணை குறித்து கேட்டறிந்தார். 

பின்னர் வீட்டுக்கு வெளியே வந்த அவரைக் காண அங்குள்ள மக்கள் ஏராளமானோர் திரண்டு இருந்தனர்.  சுரேஷ் கோபியை பார்த்த அந்த பகுதி மக்கள் செல்ஃபி எடுக்க விரும்பி உள்ளனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற சுரேஷ் கோபி அவர்களுடன்  சிரித்தபடி செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார். துக்கம் விசாரிக்கச்சென்ற இடத்தில் செல்பி எடுத்த சுரேஷ்கோபியை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்துவருகின்றனர். 

மேலும் செய்திகள்