ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் தகுதிநீக்க வழக்கு: சபாநாயகர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Update: 2018-07-09 23:30 GMT
புதுடெல்லி,

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க கொறடா சக்கரபாணி தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 7 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு ஆகியவை மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூசன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

விசாரணை தொடங்கியதும் தி.மு.க. கொறடா சக்கரபாணி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் அம்ரேந்தர் சரண், அ.தி.மு.க. கொறடா உத்தரவுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் செயல்பட்டவர்கள் மீது புகார் அளித்தும் சபாநாயகர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்துவிட்டார். இது அரசியல்சாசனத்துக்கு எதிரானது. எனவே இதில் நீதிமன்றம் தலையிட வேண்டும். ஆனால் இதை சென்னை ஐகோர்ட்டு கருத்தில்கொள்ள தவறிவிட்டது. எனவே, ஐகோர்ட்டு உத்தரவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதிட்டார்.

அதற்கு தமிழக சட்டமன்ற சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, இந்த விஷயத்தில் முடிவெடுப்பது தொடர்பாக நீதிமன்றம் சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது என்பதை சுட்டிக்காட்டியே சென்னை ஐகோர்ட்டு மனுக்களை தள்ளுபடி செய்தது.

மேலும், அ.தி.மு.க.வின் 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரி தி.மு.க. வை சேர்ந்த சக்கரபாணி வழக்கு தொடுக்க எந்த முகாந்திரமும் கிடையாது. எனவே அவர்களது மனுவை ஏற்கக்கூடாது என வாதிட்டார்.

இதனையடுத்து நீதிபதிகள், இந்த மனுக்கள் தொடர்பாக சபாநாயகர், ஓ.பன்னீர்செல்வம் தரப்பு எம்.எல்.ஏ.க்கள், சட்டப்பேரவை செயலாளர் ஆகியோர் 4 வாரங்களில் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்