கோவா மந்திரி திடீர் உடல் நல குறைவால் மும்பை மருத்துவமனையில் அனுமதி

கோவா பொது பணி துறை மந்திரி திடீர் உடல் நல குறைவால் மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

Update: 2018-07-10 06:52 GMT

பனாஜி,

கோவாவில் முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது.  இவரது அமைச்சரவையில் பொது பணி துறை மந்திரியாக இருப்பவர் சுதீன் தவாலிகார் (வயது 61).  பாரதீய ஜனதா தலைமையிலான கூட்டணி அரசில் சுதீன் சார்ந்த மகாராஷ்டிரவாடி கோமந்தக கட்சி அங்கம் வகிக்கின்றது.

இந்த நிலையில், இவர் திடீரென உடல் நல குறைவால் மும்பையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளார்.  இது வழக்கம்போல் நடைபெறும் உடல் நல பரிசோதனை என அவரது இளைய சகோதரர் தீபக் தவாலிகார் கூறியுள்ளார்.

ஆனால் பெயர் வெளியிட விரும்பிடாத மற்றொரு குடும்ப உறுப்பினரொருவர், நோயை கண்டறிவதற்காக மந்திரி பையாப்சி சோதனை மேற்கொண்டுள்ளார் என கூறியுள்ளார்.

இதுபற்றிய பிற விவரங்களை தெரிவிக்க அவரது குடும்பத்தினர் மறுத்து விட்டனர்.

மும்பையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் கோவாவின் 2வது மந்திரி சுதீன் ஆவார்.  இதற்கு முன் கோவா மின்துறை மந்திரி பாண்டுரங் மத்கைகர் கடந்த மாதம் மூளையில் ஏற்பட்ட ஸ்டிரோக்கிற்கு சிகிச்சை பெற மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த வருட தொடக்கத்தில் முதல் மந்திரி பாரிக்கர் மும்பை லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.  பின் அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்று 3 மாதங்கள் கழித்து நாடு திரும்பினார்.

அவர் அமெரிக்கா செல்வதற்கு முன் அமைக்கப்பட்ட அமைச்சரவை ஆலோசனை குழுவின் உறுப்பினராக சுதீன் செயல்பட்டார்.

மேலும் செய்திகள்