கடற்படை ரகசியம் கசிந்த விவகாரம்: ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை

கடற்படை ரகசியம் கசிய விட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-07-11 14:04 GMT

புதுடெல்லி, 

டெல்லியில் உள்ள கடற்படை நடவடிக்கைகளுக்கான இயக்குனரகத்தில் இருந்து பாதுகாப்புத்துறை ரகசியங்கள் கசிய விடப்பட்டதை 2005–ம் ஆண்டு விமானப்படை உளவுப்பிரிவு கண்டுபிடித்தது. இந்த சோதனையின் போது, கடற்படையின் எதிர்கால திட்டங்கள் மற்றும் தயார் நிலை உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய ‘பென் டிரைவ்’ ஒன்றை அவர்கள் கைப்பற்றினர்.

நாடு முழுவதும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய இந்த குற்ற சம்பவத்தில் ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி ரவிசங்கரன், ஆயுத வியாபாரி அபிஷேக் வர்மா ஆகியோர் மூளையாக இருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற ராணுவ கேப்டன்கள் சலாம் சிங் ரத்தோர், ஜர்னைல் சிங் கல்ரா ஆகியோர் உள்பட பல அதிகாரிகள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தேச பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்ட இந்த அதிகாரிகள் மீதான வழக்குகள் அனைத்தையும் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு விசாரித்து வந்தது. இதில் சலாம் சிங் ரத்தோர், ஜர்னைல் சிங் கல்ரா ஆகியோருக்கு எதிரான வழக்கில்  தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் சலாம் சிங் ரத்தோருக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி எஸ்.கே.அகர்வால் தீர்ப்பளித்தார். ஜர்னைல் சிங் கல்ரா விடுதலை செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்