வகுப்பு தலைவனாக தேர்வாகாததால் 9-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை

வகுப்பு தலைவனாக தேர்வாகாததால் 9-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2018-07-12 07:38 GMT
பெங்களூரு,

பெங்களூரின் தென்மேற்கு பகுதியில் உள்ள ராஜேஸ்வரிநகர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா. இவரது மகன் துருவ்ராஜ். 14 வயதுடைய துருவ்ராஜ் ஆர் ஆர் நகரிலுள்ள ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில் பள்ளியில் நடைபெற்ற வகுப்பு தலைவனுக்கான தேர்தலில் தோல்வியடைந்ததால் விரக்தி அடைந்த மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்நிலையில் மாணவனின் தற்கொலை குறித்து போலீசாரிடம் புகார் அளித்துள்ள திவ்யா கூறுகையில்,

”சில மாதங்களுக்கு முன்னர் என் மகன் பயின்ற பள்ளியில் வகுப்பு தலைவனுக்கான தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 4 மாணவர்கள் கலந்து கொண்டு போட்டி போட்ட நிலையில், என் மகன் சிறப்பாக முறையில் நடந்து கொண்டான். எப்படியும் நான் தான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையில் என் மகன் இருந்தான். இந்நிலையில் வேறொரு மாணவன் வகுப்பு தலைவனாக தேர்ந்தெடுக்கப்பட மிகவும் வருத்தமுற்ற அவன், வகுப்பு தலைவனாக இருக்க வேண்டிய அனைத்து தகுதிகளும் எனக்கு இருக்க, என்னை ஏன் மறுத்தார்கள் என வருந்தினான். இதனால் கடந்த இரு நாட்களாக விளையாட செல்லாமல் வீட்டிலேயே அடைப்பட்டு கிடந்தான். 

இதனிடையே நேற்றிரவு சாப்பிடுவதற்காக என் மகனின் அறையின் கதவை தட்டினேன். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அதிர்ச்சியுற்ற நான், அருகிலுள்ளவர்களின் துணையோடு கதவை உடைத்து கொண்டு பார்க்கும் போது என் மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தான். மருத்துவமனைக்கு விரைந்து செல்ல மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவன் யுகேஜி படிக்கும் போது இதே போல் தான் என் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது போல் தேர்வு வைத்து மாணவர்களின் மனநிலையை பாதிக்க வைக்கும் இந்த பள்ளியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கூறினார்.

மேலும் செய்திகள்