பாவமன்னிப்பு கேட்க வந்த பெண்ணை கற்பழித்த வழக்கு: கேரள பாதிரியார் போலீசில் சரண்

கேரளாவில் மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சபையை சேர்ந்த ஒரு தேவாலயத்தில் பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை, பாதிரியார்கள் மிரட்டி கற்பழித்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

Update: 2018-07-12 22:39 GMT

கொல்லம்,

மலங்கரை ஆர்த்தோடக்ஸ் சிரியன் சபை நிர்வாகத்திடம் இதுதொடர்பாக, பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கடந்த மாதம்  புகார் செய்தார். அப்போது, அவருக்கும், நிர்வாகிக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடல் அடங்கிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து இச்சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து ஆப்ரகாம் வர்கீஸ் என்கிற சோனி, ஜோப் மேத்யூ மற்றும் ஜாய்ஸ் கே ஜார்ஜ் உள்பட 4 பாதிரியார்கள் மீது கேரள போலீசார் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்தனர்.

உடனடியாக ஆப்ரகாம் வர்கீஸ், ஜோப் மேத்யூ, ஜாய்ஸ் கே ஜார்ஜ் ஆகிய 3 பேரும் இந்த வழக்கில் தங்களுக்கு முன்ஜாமீன் வழங்கக்கோரி கேரள ஐகோர்ட்டை அணுகினர். ஆனால் அவர்களுக்கு முன்ஜாமீன் வழங்க நீதிபதி மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் பாதிரியார் ஜோப் மேத்யூ, கொல்லம் மாவட்டத்தில் உள்ள குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் நேற்று சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மற்ற 2 பாதிரியார்களும் தலைமறைவாகிவிட்டதாகவும், அவர்களை கைது செய்யும் தீவிர நடவடிக்கையில் இறங்கி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்