கர்நாடகாவில் தொடரும் கனமழை, தமிழகத்துக்கு காவிரியில் கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு

தமிழ்நாட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் காவிரியில் கூடுதல் நீர் திறக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-07-13 13:30 GMT
மண்டியா,  

கர்நாடகத்தில் இவ்வாண்டு தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதுவரை பெய்த மழைக்கே கர்நாடகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஸ்தம்பித்துவிட்டன. இன்னும் மழை ஓய்ந்தபாடில்லை. தொடர் கனமழையின் காரணமாக கர்நாடகத்தில் ஓடும் காவிரி, கபிலா, துங்கா, பத்ரா, ஹேமாவதி உள்பட அனைத்து ஆறுகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. காவிரியின் குறுக்கே அமைந்துள்ள கே.ஆர்.எஸ்.(கிருஷ்ணராஜ சாகர்) அணை தனது முழு கொள்ளளவை எட்டும் தருவாயில் உள்ளது. 

கே.ஆர்.எஸ். அணை நிரம்ப இன்னும் 4.60 அடி தான் பாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் மற்றொரு முக்கிய அணையான கபினி அணையும் நிரம்பும் தருவாயில் உள்ளது. அணையில் இருந்து வினாடிக்கு 60 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. கபினி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து திறந்து விடப்பட்டுள்ள தண்ணீர் நேரடியாக தமிழகம் வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதன்படி இவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 63 ஆயிரத்து 766 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கே.ஆர்.எஸ். அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் ஞாயிற்றுக்கிழமை முதல் அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறக்கப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 23 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டால் தமிழகத்திற்கு மொத்தம் வினாடிக்கு 83 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வரும். 

மேலும் செய்திகள்