சமூக ஊடக மையம் அமைப்பது நாட்டு மக்களை உளவு பார்க்கும் நிலையை ஏற்படுத்தும்

சமூக ஊடக மையம் அமைப்பது நாட்டு மக்களை உளவு பார்க்கும் நிலையை ஏற்படுத்தும் என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2018-07-13 22:45 GMT

புதுடெல்லி,

தனி நபர்கள் டுவிட்டர், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் மற்றும் அவற்றின் இ–மெயில்களில் பதிவு செய்யும் உள்ளடக்கங்களை மேற்பார்வையிட சமூக ஊடக மையம் ஒன்றை நிறுவ மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை திட்டமிட்டு உள்ளது. இதற்கான மென்பொருளை உருவாக்கிட மத்திய அரசு டெண்டரும் விட்டுள்ளது. டெண்டர் திறப்பதற்கான நாள் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20–ந்தேதி ஆகும்.

இந்த நிலையில் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையின் இந்த உத்தரவு தனிமனித சுதந்திரத்தை பறிக்கும் வகையில் உள்ளது. எனவே இந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும் என்று கோரி திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மஹூவா மொய்த்ரா சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக பரிசீலனைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘‘நாட்டு மக்களின் வாட்ஸ்–அப் தகவல்களை மத்திய அரசு உளவு பார்க்க விரும்புகிறது. இது ஒருவரை ரகசியமாக கண்காணிப்பது போன்ற நிலையைத்தான் ஏற்படுத்தும். டெண்டர் திறப்பதற்கான கடைசி தேதிக்கு முன்பாகவே, வருகிற 3–ந்தேதி இந்த மனு விசாரணைக்கு பட்டியலிடப்படும்’’ என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்