கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை, 12 பேர் உயிரிழப்பு, மாவட்ட நிர்வாகம் உஷார்

கேரளாவில் கனமழை காரணமாக விபத்து சம்பவங்களில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர், 3 பேர் மாயமாகியுள்ளனர்.

Update: 2018-07-17 13:06 GMT

திருவனந்தபுரம், 

கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. மாநில பேரிடர் மீட்பு குழு மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் வைக்கப்பட்டு வருகிறார்கள். மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வரையில் கனமழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதால் மீட்பு பணிகளுக்கு தயாராக இருக்க வேண்டும், மாவட்ட நிர்வாகம் உஷார் நிலையில் இருக்க வேண்டும் என முதல்-அமைச்சர் பினராய் விஜயன் உத்தரவிட்டுள்ளார். 

மழையை அடுத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளிடம் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் பேசிய பினராய் விஜயன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதியில் மக்களுக்கு உதவி செய்ய நிவாரணப் பொருட்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவும் உத்தரவிட்டுள்ளார். மாநிலத்தில் மழை காரணமாக விபத்து சம்பவங்களில் 12 பேர் உயிரிழந்து உள்ளனர் என்றும் 3 பேர் மாயமாகியுள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. பம்பை ஆற்றில் சபரிமலை பக்தர் ஒருவரும், கோட்டயம் மணிமாலா ஆற்றில் இருவரும் மாயமாகியுள்ளனர் எனவும் அவர்களை தேடும் பணி நடக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மக்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. மாநிலத்தில் கடந்த 24 மணி நேரங்களில் 111 முகாம்களை அமைத்துள்ளோம், ஆழப்புலா மாவட்டத்தில் அதிகமான முகாம்களை அமைத்து உள்ளோம் என மாநில பேரிடர் மீட்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அங்கு நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக முதல்-அமைச்சர் பினராய் விஜயன் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்