12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை

12 வயதுக்கு உட்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்கும் வரைவு மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

Update: 2018-07-18 23:00 GMT
புதுடெல்லி, 

இந்தியாவில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதை தடுக்க 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்தால் மரண தண்டனை விதிக்கும் அவசர சட்டத்தை ஏப்ரல் மாதம் மத்திய அரசு கொண்டு வந்தது.

இந்த அவசர சட்டத்துக்கு மாற்றாக தற்போது நடைபெற்று வரும் மழைக்கால நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கிரிமினல் சட்ட திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இது தொடர்பான வரைவு மசோதாவை மத்திய உள்துறை அமைச்சகம் தயாரித்தது.

இந்நிலையில் மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கிரிமினல் சட்ட திருத்த மசோதாவுக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இந்த வரைவு மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஏற்கனவே கொண்டு வரப்பட்ட அவசர சட்டத்தில் உள்ள அம்சங்கள் புதிய வரைவு மசோதாவில் சேர்க்கப்பட்டு உள்ளன. இதில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் ஆயுள் முழுவதும் சிறை தண்டனை அல்லது அதிகபட்சம் மரண தண்டனை விதிக்கப்படும். இது முன்பு 20 ஆண்டுகள் சிறை தண்டனை என இருந்தது.

மேலும் குற்றச்சாட்டுக்கு ஆளாகும் நபருக்கு முன்ஜாமீன் கிடைக்காது. இந்த வழக்கை 2 மாதத்துக்குள் விசாரித்து கோர்ட்டு தண்டனை அளிக்க வேண்டும். மேல்முறையீடு வழக்குகளை 6 மாதங்களில் முடிக்க வேண்டும்.

16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு முன்பு இருந்த 10 ஆண்டுகள் சிறை தண்டனை தற்போது 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. குற்றத்தின் தன்மையின் அடிப்படையில் அதிகபட்சமாக ஆயுள் முழுவதும் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கும் முன்ஜாமீன் கிடைக்காது.

பெண்களை கற்பழிக்கும் குற்றவாளிகளுக்கு முன்பு இருந்த 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை தற்போது 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும்.

இந்த தகவலை சட்டத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிறுவர்கள் பிச்சை எடுப்பதற்காக கடத்தப்படுவது, சிறுமிகள் மற்றும் பெண்களை கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது போன்றவற்றை தடுக்க கடத்தல் தடுப்பு மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த மசோதாவுக்கு மத்திய மந்திரிசபை பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தது.

இந்த மசோதாவை நேற்று நாடாளுமன்ற மக்களவையில் மத்திய மந்திரி மேனகா காந்தி தாக்கல் செய்தார். இதன்படி, கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை கிடைப்பதுடன், ரூ.1 லட்சத்துக்கும் மேல் அபராதமும் செலுத்த நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்