கோசாலையில் 36 பசுக்கள் மர்மமாக உயிரிழப்பு, டெல்லி அரசு விசாரணைக்கு உத்தரவு

கோசாலையில் 36 பசுக்கள் மர்மமாக உயிரிழந்த விவகாரம் தொடர்பாக டெல்லி அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

Update: 2018-07-27 14:51 GMT
புதுடெல்லி, 

டெல்லி துவாரகா பகுதியில் குமனேரா கிராமத்தில் 20 ஏக்கர் பரப்பளவில் ஒரு கோசாலை இயங்கி வருகிறது. இங்கு சுமார் 1,400 பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அப்பணியில் 20 ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இன்று அங்கு 36 பசுக்கள் இறந்து கிடந்தன. இதுபற்றி போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. போலீசார், கால்நடை மருத்துவ குழுவை அனுப்பி வைத்தனர். ஏதேனும் நோய் காரணமாக, பசுக்கள் உயிரிழந்து இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

இருப்பினும், பிரேத பரிசோதனை முடிந்த பிறகே உண்மையான காரணம் தெரிய வரும் என்றும், அதன் அடிப்படையில், தேவைப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீஸ் துணை கமி‌ஷனர் தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. “தகவல் கிடைத்ததும் கோசாலைக்கு சென்ற 6 கால்நடை மருத்துவர்கள் பரிசோதனையை செய்தார்கள், பிரேத பரிசோதனையின் மூலம்தான் பசுக்கள் எவ்வாறு இறந்தது என்பது தெரியவரும், இதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னர் சட்டப்பூர்வமான நடவடிக்கை தொடங்கும்,” என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்