பாலாற்றின் குறுக்கே தடுப்பணையின் உயரம் அதிகரிப்பு: ஆந்திர அரசின் நடவடிக்கைக்கு தடைகோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திராவின் நடவடிக்கைக்கு தடை விதிக்கக்கோரிய தமிழக அரசின் மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

Update: 2018-08-06 23:25 GMT

புதுடெல்லி,

ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ள சித்தூர் மாவட்டம் பெரும்பள்ளம் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணையை 5 அடியில் இருந்து 12 அடியாக உயர்த்தும் ஆந்திர மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிராக தமிழக அரசு 2016-ம் ஆண்டில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

1892-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட மெட்ராஸ்-மைசூர் ஒப்பந்தத்தில், நதிகள் உற்பத்தியாகும் மாநிலம் (ஆந்திரா), அந்த நதிகளின் நீரை கடைசியாக பெறக்கூடிய மாநிலத்தின் (தமிழகம்) முன்அனுமதி பெறாமல் அணைகளையோ, தடுப்பணைகளையோ, நீரை தேக்கிக்கொள்ளும் கட்டுமானங்களையோ கட்டக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

அந்த ஒப்பந்தத்தை மீறி சித்தூர் பெரும்பள்ளம் கிராமத்தில் பாலாற்றின் குறுக்கே உள்ள அணையை 5 அடியில் இருந்து 12 அடியாக உயர்த்தும் ஆந்திர மாநில அரசின் நடவடிக்கை தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியதாக்குகிறது. தமிழக அரசை கலந்தாலோசிக்காமல் ஒருதலைபட்சமாக ஆந்திர அரசு எடுக்கும் நடவடிக்கை அரசியல் சட்டத்துக்கு எதிரானது.

எனவே, தமிழகத்துக்கு வரும் இயல்பான நீரோட்டத்தை உறுதிசெய்யும் வகையிலும், தடுப்பணையின் உயரத்தை உயர்த்தக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அபய்மனோகர் சப்ரே, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் வக்கீல் ஜி.உமாபதி ஆஜராகி இருந்தார். விசாரணை தொடங்கியதும் இந்த வழக்கு தொடர்பான முக்கிய அம்சங்கள் ஏற்கனவே இருதரப்பிலும் தாக்கல் செய்திருப்பதாகவும், தங்களுக்குள் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டதாகவும் கோர்ட்டுக்கு தெரிவிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான கூடுதல் ஆவணங்களை இருதரப்பினரும் 8 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், 8 வாரங்களுக்கு பிறகு விரிவான விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்