அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தக்கோரி வழக்கு: டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தக்கோரி தொடரப்பட்ட வழக்கில் 4 வாரத்துக்குள் தேர்தல் கமி‌ஷன் முடிவு எடுக்க வேண்டும் என்று டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2018-08-10 23:00 GMT

புதுடெல்லி,

அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி டெல்லி ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டு இருந்ததாவது:–

அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், இவர்களால் கட்சியில் இருந்து செய்யப்பட்ட பதவி நீக்கங்கள் செல்லாது எனவும் அறிவிக்கவேண்டும்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவிக்கு விரைவில் தேர்தல் நடத்தவேண்டும் என்று ஏற்கனவே தேர்தல் கமி‌ஷனுக்கு நான் தாக்கல் செய்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தேர்தல் கமி‌ஷனுக்கு உத்தரவு பிறப்பிக்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி வி.காமேஸ்வர் ராவ் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

விசாரணை தொடங்கியதும் தேர்தல் கமி‌ஷன் இந்த மனுவை விசாரித்து 4 வாரங்களுக்குள் முடிவு எடுக்கவேண்டும் என்று நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

மேலும் செய்திகள்