நம்பிக்கை இழந்தவர்கள்தான் உள்நாட்டு போர் என்பார்கள் மம்தாவிற்கு பிரதமர் மோடி பதிலடி

தேசிய குடிமக்கள் பதிவேடு விவகாரத்தில் மம்தா பானர்ஜிக்கு பதிலடிகொடுத்த பிரதமர் மோடி, நம்பிக்கை இழந்தவர்கள்தான் உள்நாட்டு போர் என்பார்கள் என்று கூறியுள்ளார். #PMModi

Update: 2018-08-12 12:24 GMT



அசாம் மாநிலத்தில் வசிப்போர் குறித்த தேசிய குடிமக்கள் இறுதி வரைவு பதிவேடு வெளியிடப்பட்டதில் 40 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி இதுபற்றி மோடி அரசை கடுமையாக விமர்சித்தார்.

மம்தா பானர்ஜி பேசுகையில் “தனது அரசியல் லாபங்களுக்காக மோடி அரசு லட்சக்கணக்கானவர்களை நாடு இல்லாதவர்களாக ஆக்க முயற்சி செய்கிறது. நாட்டு மக்களை இரண்டாக பிளக்க சதி செய்கிறது. இது நாட்டில், உள்நாட்டு போருக்கும், ரத்தகளரிக்கும் வழி வகுக்கும். இதேபோல் தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேற்கு வங்காளத்தில் உங்களால் வெளியிட முடியுமா?... அப்படி செய்தால் உங்களால் ஒரு போதும் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க முடியாது” என்று சாடினார். இதுதொடர்பாக மம்தா பானர்ஜிக்கு எதிராக காவல் நிலையங்களில் புகாரும் தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி பதிலடி

இப்போது மம்தா பானர்ஜியின் உள்நாட்டு போர் கருத்துக்கு பதிலடியை கொடுத்துள்ள பிரதமர் மோடி, நம்பிக்கை இழந்தவர்கள்தான் உள்நாட்டு போர் என்பார்கள் என்று கூறியுள்ளார். “நம்பிக்கையை இழந்தவர்களும், ஆதரவை இழந்துவிடுவோம் என அச்சம் கொள்பவர்களும், நம்முடைய அரசியலமைப்பில் நம்பிக்கை குறைந்தவர்களும்தான்  ‘உள்நாட்டு போர்’ ,  ரத்தகளரிக்கு வழி போன்ற வார்த்தையை பயன்படுத்துவார்கள்,” என்று கூறியுள்ளார் பிரதமர் மோடி.

மேலும் செய்திகள்