“தெற்காசிய அரசியலில் வெற்றிடம்” வாஜ்பாயின் இறுதிச் சடங்கில் அண்டைய நாட்டு தலைவர்கள் கலந்துக் கொள்கிறார்கள்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் இறுதிச் சடங்கில் அண்டைய நாட்டு தலைவர்கள் கலந்துக் கொள்கிறார்கள். #Vajpayee #RIPVajpayee

Update: 2018-08-17 08:42 GMT
புதுடெல்லி,

பா.ஜனதாவின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பாய் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். அவருக்கு வயது 93.

 வாஜ்பாயின் இறுதிச்சடங்கு டெல்லியில் இன்று மாலை நடைபெறுகிறது. வாஜ்பாயின் மறைவு இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்டைய நாட்டு மக்களும் தங்களுடைய வேதனையை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகிறார்கள். அவருடைய இறுதிச்சடங்கு டெல்லியில் இன்று மாலை நடக்கிறது. இறுதிச்சடங்கில் அண்டைய நாடுகளின் தலைவர்கள் கலந்துக் கொள்கிறார்கள். பூடான் மன்னர் ஜிக்மே கேசரும் இறுதிச்சடங்கில் கலந்துக் கொள்கிறார். பாகிஸ்தான் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர், நேபாளம் மற்றும் வங்காளதேசத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்துக் கொள்கிறார்கள். 

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், “இந்தியா-பாகிஸ்தான் உறவு மேம்பட அவருடைய பங்களிப்பு மகத்தானது, தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பிற்கும் (சார்க்), வளர்ச்சிக்கும் முக்கிய பங்களிப்பை கொடுத்த திறமைபெற்ற அரசியல் தலைவராவார். வாஜ்பாய் குடும்பத்தினர், இந்திய அரசு மற்றும் மக்களுக்கு எங்களுடைய மனப்பூர்வமான இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமராக பங்கேற்கவுள்ள இம்ரான் கான் பாகிஸ்தான் மீடியாவிற்கு அளித்துள்ள பேட்டியில், “வாஜ்பாயின் மறைவுக்கு பின்னர் தெற்காசிய அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அரசியல் வேறுபாடுகள் கொண்டிருக்கலாம் ஆனால் சமாதானத்தின் விருப்பம் எல்லையில் நிறைந்துள்ளது. இந்த கடினமான நேரத்தில் நாங்கள் இந்தியாவுடன் நிற்கிறோம்,” என கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்