கேரளாவில் மழை வெள்ளம்: பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 100 டன் சத்துணவு பாக்கெட்டுகள்

கேரளாவில் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 100 டன் சத்துணவு பாக்கெட்டுகளை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியது.

Update: 2018-08-18 22:00 GMT
புதுடெல்லி,

கேரள மாநிலத்தில் மழை வெள்ள நிவாரண பணிகளுக்கு பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகிறார்கள். மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காகவே 100 டன் சத்துணவு பாக்கெட்டுகளை அனுப்பியுள்ளது. தெலுங்கானா அரசுடன் இணைந்து பணியாற்றி இந்த சத்துணவு பாக்கெட்டுகளை தயாரித்து ஐதராபாத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அனுப்பியுள்ளது.

‘பலாமிர்தம்’ என்று அழைக்கப்படும் இதில் கோதுமை, கொண்டைக்கடலை, பால் பவுடர், எண்ணெய், சர்க்கரை ஆகியவை கலந்து உடனே சாப்பிடக்கூடிய வகையில் தயார் செய்யப்பட்டு இருக்கும். 50 சதவீதம் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின்கள் நிறைந்த இது தலா ஒரு கிலோ பாக்கெட்டுகளாக அனுப்பப்பட்டுள்ளது. 7 மாதம் முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் இதனை சாப்பிடலாம். கேரளாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு மையத்தின் நிவாரண குழுவினர் இந்த உணவு பாக்கெட்டுகளை வினியோகிக்க தயார் நிலையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்