இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கடத்தலில் தொடர்புடைய 2 குற்றவாளிகளை விடுவித்தது நீதிமன்றம்

புதுடெல்லியில் இருந்து புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தின் கடத்தலில் தொடர்புடைய 2 குற்றவாளிகளை டெல்லி நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.

Update: 2018-08-27 11:45 GMT

புதுடெல்லி,

இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடந்த 1981ம் ஆண்டு செப்டம்பர் 29ந்தேதி புதுடெல்லியில் இருந்து புறப்பட்டு அமிர்தசரஸ் வழியே ஸ்ரீநகர் நோக்கி சென்றது.  இந்த நிலையில், தஜீந்தர் பால் சிங் மற்றும் சத்னம் சிங் ஆகிய 2 பேர் நடுவானில் விமானத்தினை கடத்தி பாகிஸ்தான் நாட்டின் லாஹூர் நகருக்கு கொண்டு சென்று தரையிறங்க செய்தனர்.

அங்கு அவர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.  அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.  அதன்பின் தண்டனை முடிந்து பாகிஸ்தானில் இருந்து 2000ம் ஆண்டில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

அவர்கள் இருவரும் இந்த வழக்கிலிருந்து தங்களை விடுவிக்கும்படி கோரினர்.  ஆனால் அவர்களது மனுவை செசன்ஸ்  நீதிமன்றம் ஒன்று தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு டெல்லி போலீசார் அவர்கள் மீது 121 (இந்திய அரசுக்கு எதிராக போர் தொடுத்தல்), 121ஏ (இந்தியாவுக்கு எதிராக சில குற்றங்களை செய்ய திட்டமிடல்), 124ஏ (தேச துரோகம்) மற்றும் 120பி (குற்ற சதியில் ஈடுபடல்) ஆகிய பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

செசன்ஸ் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரிய அவர்களது மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் இந்த வழக்கை விசாரிக்கும்படி விசாரணை நீதிமன்றத்திடம் கேட்டு கொண்டது.

கடந்த வருடம் ஜூலையில் அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்நிலையில் டெல்லி நீதிமன்றம் ஒன்றின் கூடுதல் செசன்ஸ் நீதிபதி அஜய் பாண்டே அவர்கள் இந்த வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து இன்று உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்