டெல்லியில் உள்ள ‘நேரு அருங்காட்சியகத்தில் மாற்றம் செய்யக்கூடாது’ பிரதமர் மோடிக்கு, மன்மோகன் சிங் கடிதம்

டெல்லியில் உள்ள நேரு அருங்காட்சியகத்தில் மாற்றம் செய்யக்கூடாது என பிரதமர் மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2018-08-27 21:45 GMT
புதுடெல்லி, 

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, தனது கடைசி காலத்தில் டெல்லியில் உள்ள தீன் மூர்த்தி இல்லத்தில் வசித்து வந்தார். அவரது மறைவுக்குப்பின் இந்த இல்லம் அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக மாற்றப்பட்டு உள்ளது. இதில் நேரு பயன்படுத்திய பொருட்கள் மற்றும் நூல்கள் வைக்கப்பட்டு உள்ளன.

ஜவஹர்லால் நேரு நினைவாக நிறுவப்பட்டு உள்ள இந்த அருங்காட்சியகத்தை அனைத்து பிரதமருக்குமான நினைவில்லமாக மாற்றியமைக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தெரிகிறது. இதற்காக நிதி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் கவலை வெளியிட்டு உள்ளார். இந்த முடிவை கைவிடக்கோரி பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

ஜவஹர்லால் நேரு காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல. மாறாக அவர் ஒட்டுமொத்த தேசத்துக்கும் உரியவர். அந்த உத்வேகத்தில்தான் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

நாடாளுமன்றத்தில் துடிப்பான ஆளுமையாக திகழ்ந்தவர் ஜவஹர்லால் நேரு. அவரது தனித்துவமும், பெருமையும் எதிர்க்கட்சிகளால் கூட அங்கீகரிக்கப்பட்டது. நமது நாட்டின் மீதும் உலகின் மீதும் நம்பமுடியாத முத்திரையை அவர் பதித்து சென்று இருக்கிறார்.

இந்திய தேசியத்தின் முதன்மை சிற்பியும், நாட்டின் முதல் பிரதமருமான ஜவஹர்லால் நேருவின் நினைவாக இந்த அருங்காட்சியகம் மற்றும் நூலகம் நிறுவப்பட்டது. இந்த நினைவகத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் கூட எந்த மாற்றமும் செய்ய முயற்சி நடைபெறவில்லை. ஆனால் தற்போதைய அரசு இந்த நினைவிடத்தின் இயல்புகளை மாற்றியமைக்க முயல்வது வருத்தம் அளிக்கிறது.

நாட்டின் முதல் பிரதமர் பண்டித நேருவின் தீன் மூர்த்தி இல்லத்தின் மீதான உணர்வுகளை மதித்து, அங்கு எந்த மாற்றமும் செய்யாமல் விட்டுவிட வேண்டும். இதுதான் வரலாற்றுக்கும் பாரம்பரியத்துக்கும் அளிக்கும் மரியாதை ஆகும்.

இவ்வாறு மன்மோகன் சிங் அந்த கடிதத்தில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்