தேசிய செய்திகள்
ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் கல்வி கட்டணத்தை 15–ந் தேதிக்குள் நிர்ணயிக்க வேண்டும்

ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில் கல்வி கட்டணத்தை 15–ந் தேதிக்குள் நிர்ணயிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி, தமிழக அரசின் கீழ் இயங்கும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரியில், அரசு மருத்துவ கல்லூரிகளில் வசூலிக்கும் கட்டணத்தை தான் வசூலிக்க வேண்டும் என உத்தரவிடக்கோரி அமீரா பாத்திமா உள்பட 189 மாணவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.இதை எதிர்த்து மாணவர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜூலை 13–ந் தேதி வழங்கிய தீர்ப்பில், கல்லூரி நிர்வாகம் 2 வாரத்தில் அனைத்து கணக்கு வழக்குகள் அடங்கிய ஆவணங்களை தமிழக அரசு அமைத்துள்ள கட்டண நிர்ணய குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த குழு ஆகஸ்டு 31–ந் தேதிக்குள் கல்வி கட்டணத்தை முடிவு செய்து அன்றே வெளியிட வேண்டும். ஏற்கனவே கூடுதலாக பெற்ற கட்டணத்தை மாணவர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும் என்று தெரிவித்தனர்.இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பல்கலைக்கழக கட்டண நிர்ணய குழு சார்பில், கட்டணத்தை நிர்ணயிக்க மேலும் 3 மாதம் அவகாசம் தேவை என நேற்று கோரிக்கை விடுக்கப்பட்டது.இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் 15–ந் தேதிக்குள் கல்வி கட்டணத்தை நிர்ணயித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர்.