தேசிய செய்திகள்
நாகாலாந்திற்கு கேரள மக்கள் உதவ வேண்டும் பினராயி விஜயன் வேண்டுகோள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகாலாந்திற்கு கேரள மக்கள் உதவ வேண்டும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #PinarayiVijayan
திருவனந்தபுரம்,

நாகாலாந்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருவதால்  அங்குள்ள முக்கிய நகரங்களில் 350க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.  

கிபேர், பெக், தொபு, டியூன்சங் ஆகிய பகுதிகள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.  மாநிலத்தில் வெள்ள சீரமைப்புக்கு ரூ.800 கோடி தேவைப்படும் எனஅம்மாநில முதல்-மந்திரி நெப்யூ ரியோ மத்திய அரசிடம் கோரியுள்ளார். 

மேலும் வெள்ள நிவாரண நிதி வழங்குமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இந்தநிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகாலாந்து மக்களுக்கு கேரள மக்கள் உதவ வேண்டும் என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்து வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நாம் எதிர்கொண்ட நெருக்கடிகளை தற்போது அவர்களும் எதிர்கொண்டு வருகின்றனர். நாம் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு விட்டோம். நாம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் போது நாகாலாந்து துணை முதல்-மந்திரி திருவனந்தபுரம் வந்து நமது துயரத்தில் தோளாடு தோள் கொடுத்தார். 

அவர்கள் கேரளாவிற்கு உதவினார்கள். அதே அன்பை மனதில் வைத்து நாமும் இந்த தருணத்தில் அவர்களுக்கு தோள்கொடுத்து உதவ வேண்டும் என கூறியுள்ளார்.