தேசிய செய்திகள்
பிரபல தனியார் வங்கியின் துணைத்தலைவர் மாயம், இரத்தக்கறையுடன் கார் கண்டெடுப்பு

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எச்.டி.எஃப்.சி. வங்கியின் துணைத்தலைவர் சித்தார்த் சங்வி மாயமாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #HDFCVicePresident
மும்பை,

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எச்.டி.எஃப்.சி. வங்கியின் துணைத்தலைவர் சித்தார்த் சங்வி (39) மர்மமான முறையில் மாயமாகி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 5-ந் தேதி மும்பையிலுள்ள கமலா மில்ஸ் வளாகத்தில் செயல்பட்டு வரும் வங்கி அலுவலகத்திற்கு சென்ற சித்தார்த் இரவு 10 மணியாகியும் வீடு திரும்பாததால் அவரது மனைவி ஜோஷி மார்க் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். 

இதனிடையே எச்.டி.எஃப்.சி. வங்கியின் துணைத்தலைவர் சித்தார்த் சங்வி மாயமானது குறித்து தீவிர விசாரணை நடத்தி வரும் போலீசார் கோபர் காய்ரானே பகுதியில் அவரது காரை கண்டெடுத்துள்ளனர். காரின் இருக்கையில் இரத்தக்கறைகள் படிந்திருந்ததை கண்டுபிடித்த போலீசார், இரத்தத்தை பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பியுள்ளனர். அதேபோல், சங்வி தனது அலுவலகத்திலிருந்து 7.30 மணியளவில் காரிலிருந்து வெளியேறிய காட்சியானது சிசிடிவி காமிராவில் பதிவாகியுள்ளதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இது குறித்து மும்பை, தானே, நவிமும்பை ஆகிய நகரங்களில் உள்ள அனைத்துக் காவல்நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரை யாரோ கடத்திச் சென்றிருக்கலாம் என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.