தேசிய செய்திகள்
பீகாரில் பாரத் பந்த்: சாலை மறியலால் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் உயிரிழந்த குழந்தை

பீகார் மாநிலத்தில் நேற்று பாரத் பந்த் நடத்தப்பட்டது. இதில் போராட்டகாரர்கள் நடத்திய சாலை மறியலால் உயிருக்கு போராடி கொண்டிருந்த குழந்தை குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் உயிரிழந்தது. #BharathBandh #BiharChild
பாட்னா,

பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கையை கண்டித்தும்  அகில இந்திய காங்கிரஸ் கட்சி மற்றும் இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் ’பாரத் பந்த்’ நாடு முழுவதும் நடத்தப்பட்டது.

இந்த முழு அடைப்பு போராட்டம் காரணமாக நாடு முழுவதும் பல இடங்களில் சாலை மற்றும் ரயில் நிலையங்கள் மறியல் நடத்தப்பட்டன. இதனிடையே பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பாரத் பந்த் போராட்டத்தில் சாலை மறியலில் பலர் ஈடுபட்டதால், நோயினால் பாதிக்கப்பட்ட 2 வயது பெண் குழந்தையை குறித்த நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து குழந்தையின் தந்தை ப்ரமோத் மாஜ்ஹி கூறுகையில், நாங்கள் ஜெஹான்பாத் அருகேயுள்ள பார்பிகா கிராமத்தில் வசித்து வருகிறோம். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வயிற்றுப்போக்கு பிரச்சனையால் என் மகள் பாதிக்கப்பட்டிருந்தாள். ஞாயிற்றுகிழமை இரவு அவளது நிலைமை மோசமாகியது. இதனால் திங்களன்று காலை என் மகளை ஜெஹான்பாத் சதார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்து விரைந்தோம். வாகனத்தில் சென்று கொண்டிருக்கையில் சாலை மறியலில் ஈடுபட்ட போராட்டக்காரர்களால், மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் சாலையிலேயே பரிதவித்தோம். குறித்த நேரத்தில் என் மகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாத காரணத்தினால், அவள் செல்லும் வழியிலேயே உயிரிழந்தாள் எனக் கூறினார். 

இதனிடையே ஜெஹான்பாத் சிவில் துணைப்பிரிவு அதிகாரி பரிதோஷ் குமார், பாரத் பந்திற்கும், குழந்தை உயிரிழந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை. குழந்தையின் உறவினர்கள் வீட்டிலிருந்து தாமதமாக மருத்துவமனைக்கு கிளம்பியதே குழந்தையின் உயிரிழப்புக்கு காரணம் எனக் கூறினார்.

மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் ப்ரசாத் குழந்தை உயிரிழப்பு குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், காங்கிரஸ் மற்றும் பிற இடதுசாரி கட்சிகளே குழந்தையின் மரணத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறினார்.