தேசிய செய்திகள்
வாராக்கடன் விவகாரம் ரகுராம் ராஜன் பதிலால் முட்டிக்கொள்ளும் காங்கிரஸ் பாரதீய ஜனதா

வாராக்கடன் பிரச்சினையில் ரகுராம் ராஜனின் பதிலை முன்வைத்து, பாஜகவும், காங்கிரஸும் பரஸ்பரம் ஒன்றின்மீது ஒன்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளன. #BJP #Congress
புதுடெல்லி

வாராக்கடன்களில் பெரும்பாலானவை கடந்த 2006-2008ஆம் ஆண்டுகளில் (ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஆட்சிக்காலம்) உருவானவை என்று ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். வாராக்கடன் பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சித்ததாக ரகுராம் ராஜனை முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் பாராட்டியிருந்தார். 

இதையடுத்து, ரகுராம் ராஜனிடம் பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான நாடாளுமன்ற மதிப்பீட்டு நிலைக்குழு விளக்கம் கேட்டிருந்தது. அதற்கு ரகுராம் ராஜன் அளித்துள்ள பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2006-08ஆம் ஆண்டில் மிகவும் வலுவாக இருந்தது. மின்உற்பத்தி நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்கள், பட்ஜெட் நிதிக்குள் செயல்படுத்தி முடிக்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தில்தான், பெரும்பாலான வாராக்கடன்கள் உருவாகின. அப்போதுதான் வங்கிகள், தவறிழைத்தன.

ரிசர்வ் வங்கி கவர்னராக நான் இருந்தபோது, நிதி மோசடிகள் தொடர்பாக விசாரணை அமைப்புகளுக்கு விரைவில் அறிக்கை அளிக்க ஏதுவாக ரிசர்வ் வங்கியால் மோசடி கண்காணிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டது. மேலும், அதிக மதிப்பில் மோசடி செய்த நபர்கள் குறித்த பட்டியலையும் பிரதமர் அலுவலகத்துக்கு நான் அனுப்பி வைத்தேன். அதில் மோசடி செய்தோரில் 1 அல்லது 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன்.

ஆனால், அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து எனக்கு தெரியாது. பொதுத் துறை வங்கிகளின் நிர்வாகக் குழுவில் ரிசர்வ் வங்கி சார்பில் ஒரு உறுப்பினர் நியமிக்கப்படுவதில் எனக்கு உடன்பாடில்லை. அவ்வாறு நியமித்தால், அக்குழு கட்டுப்படுத்தப்படுவது போன்ற மாயை உருவாகிவிடும் என்று ரகுராம் ராஜன் தெரிவித்திருந்தார்.

இதனிடையே, வாராக்கடன் பிரச்சினையில் ரகுராம் ராஜனின் பதிலை முன்வைத்து, பாஜகவும், காங்கிரஸும் பரஸ்பரம் ஒன்றின்மீது ஒன்று குற்றச்சாட்டு தெரிவித்துள்ளன. பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான ஸ்மிருதி இரானி கூறுகையில், காங்கிரஸ் புரிந்த ஊழலை ரகுராம் ராஜன் பிரகடனமாக வெளியிட்டுள்ளார்; காங்கிரஸ் கூட்டணி அரசின் அழிவு பொருளாதார கொள்கைகளை அவர் வெட்டவெளிச்சமாக்கி விட்டார் என்றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், காங்கிரஸ் கூட்டணி அரசு ஆட்சியின் இறுதியில் வாராக்கடன் ரூ.2.83 லட்சம் கோடியாக இருந்தது. அது தற்போது ரூ.10 லட்சம் கோடியாக அதிகரித்து விட்டது. இதற்கு யார் பொறுப்பு? என்றார்.