போலீஸ் அதிகாரி மகன் இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய விவகாரம் ராஜ்நாத் சிங் நடவடிக்கைக்கு உத்தரவு

இளம்பெண்ணை கொடூரமாக தாக்கிய போலீஸ் அதிகாரியின் மகனுடன் நடக்கவிருந்த திருமணத்தை நிறுத்திய பெண், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு ஆதரவாக களமிறங்கி விவகாரத்தை வெளியுலகிற்கு தெரிய வைத்துள்ளது.

Update: 2018-09-14 10:53 GMT
புதுடெல்லி,

டெல்லி காவல்துறையில் அதிகாரியாக உள்ள அசோக் சவுத்ரியின் மகன் ரோஹித் சிங் தோமர் இளம்பெண் ஒருவரை கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ கடந்த இரண்டாம் தேதி சமூக வலைதளங்களில் வெளியாகியது. இளம்பெண்ணை ரோஹித் முடியை பிடித்து இழுத்து தரையில் தள்ளி கொடூரமான முறையில் தாக்கிய காட்சிகள் அதில் இடம் பெற்று இருந்தது. இளம்பெண்ணை தோமர் தாக்கியதை அவனுடைய நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர். வீடியோவில் அவர்கள் “இவ்வளவு அடி கொடுத்தது போதும், நிறுத்து ரோஹித் என்கிறார்கள்” ஆனால் அவன் தொடர்ந்து அடிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. யாரும் இளம்பெண்ணை ரோஹித் தாக்குவதை நிறுத்த முன்வரவில்லை.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் யாரும் புகாரளிக்கவில்லை.

களமிறங்கிய மணப்பெண் 

ரோஹித் சிங் தோமருக்கு விரைவில் திருமணம் நடைபெற இருந்துள்ளது. அவனுடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்ணிற்கு இந்த வீடியோ சென்றுள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணிற்காக களமிறங்கிய அவர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். என்னுடன் திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்டுள்ள ரோஹித்தான் கொடூரமாக பெண்ணை தாக்கியுள்ளான், நடவடிக்கை எடுங்கள் என்று போலீசில் புகார் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையில், துணிச்சலாக இந்நடவடிக்கையை எடுத்த அப்பெண் அவனுடனான திருமணத்தையும் நிறுத்தி விட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் புகார்

இந்நிலையில் வீடியோவில் இடம்பெற்று இருந்த பாதிக்கப்பட்ட பெண் இன்று காவல் நிலையம் சென்று தன்னுடைய அறிக்கையை தெரிவித்துள்ளார். ரோஹித் என்னை அவனுடைய நண்பரின் அலுவலகத்திற்கு வரும்படி கேட்டுக் கொண்டான். அங்கு சென்றதும் என்னை பாலியல் பலாத்காரம் செய்தான். பின்னர் என்னை கொடூரமான முறையில் தாக்கினான். காவல் துறையிடம் செல்வேன் என்று கூறிய போது விளைவுகள் கடினமாக இருக்கும் என்று மிரட்டி என்னை கொடூரமான முறையில் தாக்கினான் என்று பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார். இதற்கிடையே காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

ராஜ்நாத் சிங் உத்தரவு

வீடியோ வைரலாகிய நிலையில் விசாரணை நடத்தி, நடவடிக்கையை எடுக்குமாறு டெல்லி போலீசுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். “ இளம்பெண்ணை வாலிபர் ஒருவர் கொடூரமாக தாக்கும் காட்சிகள் என்னுடைய பார்வைக்கு வந்துள்ளது, டெல்லி போலீசிடம் இதுதொடர்பாக தொலைபேசியில் பேசியுள்ளேன், தேவையான நடவடிக்கையை எடுக்க கேட்டுக் கொண்டுள்ளேன்,” என டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்