காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு, அழுகையை அண்டைய வீட்டாளர்கள் அலட்சியம் செய்துள்ளனர் - சிபிஐ

பீகார் காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தாக்கல் செய்துள்ள அறிக்கையில், சிறுமிகளின் அழுகையை அண்டைய வீட்டாளர்கள் அலட்சியம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-09-20 15:50 GMT

புதுடெல்லி,


பீகாரின் முசாபர்பூரில் மாநில அரசின் நிதியுதவி பெற்ற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் அரசு உதவிபெற்று காப்பகம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் தங்கியிருந்த சுமார் 34 சிறுமிகளுக்கு மயக்க மருந்து கொடுத்து காப்பக நிர்வாகிகள் மற்றும் பலர் பலாத்காரம் செய்த சம்பவம் சமீபத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது. வழக்கு விசாரணை சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கை சுப்ரீம் கோர்ட்டும் தானாக விசாரணைக்கு எடுத்தது.

 இதுதொடர்பாக விடுதி நடத்திய பிரிஜேஷ் தாக்கூர் உள்பட 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டார்கள். விசாரணை தொடர்பான தகவல்களும், சிறுமிகளுக்கு நேரிட்ட கொடுமைகளும் மீடியாக்களில் வெளியாகியது. பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பேட்டிகளும் வெளியாகியது. இதனையடுத்து முசாபர்பூர் விடுதியில் சிறுமிகள் பலாத்காரம் தொடர்பான செய்திகளை யாரும் வெளியிடக்கூடாது என பீகார் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து பத்திரிக்கையாளர்கள் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.

இவ்வழக்கை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட்டு, காப்பகத்தில் சிறுமிகள் பலாத்காரம் விவகாரத்தில் செய்திகளை வெளியிட ஒட்டுமொத்தத் தடை ஏதும் இல்லை, அதேசமயம், பாலியல் தொடர்பான செய்திகளை ஊடகங்கள் பரபரப்பாக வெளியிடாமல் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற அறிவுரையை வழங்கியது.

உயர்நீதிமன்றத்தின் தடையை நீக்கிய சுப்ரீம் கோர்ட்டு, பாதிக்கப்பட்டவர்கள் நலன் கருதி, அவர்களுடைய பெயர்கள், முகவரிகள், புகைப்படங்கள், முகம் மறைக்கப்பட்ட புகைப்படங்கள், அடையாளங்கள் என எதையும் வெளியிடக்கூடாது. இதற்கு, பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா, எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா, செய்தி ஒளிபரப்பு தர ஆணையம் மற்றும் செய்தி ஒளிபரப்பு கூட்டமைப்பு ஆகியவை உதவ வேண்டும். அதற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது என்றும் கூறியது.

இதற்கிடையே சிபிஐ தாக்கல் செய்துள்ள விசாரணை அறிக்கையில் சிறுமிகளின் அழுகையை அண்டைய வீட்டாளர்கள் அலட்சியம் செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான பிரிஜேஷ் தாக்கூரின் சொத்துக்கள் தொடர்பாக வருமான வரித்துறை விசாரணையை மேற்கொள்ளவும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

பிரிஜேஷ் தாக்கூரின் தொடர்புகள் மற்றும் செல்வாக்கு தொடர்பாக கூடுதல் விசாரணையை மேற்கொள்ள சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது.
 
பிரிஜேஷ் தாக்கூர் அப்பகுதியில் மிகவும் செல்வாக்கு மிக்க நபரும், அக்கம் பக்கத்திலுள்ள மக்களும் அவரைப் பார்த்து பயந்துள்ளனர் என்று சிபிஐ அறிக்கை காட்டுகிறது என கோர்ட்டு குறிப்பிட்டுள்ளது. காப்பகத்தில் சிறுமிகள் கதறி அழுத சத்தம் அண்டைய வீட்டாளர்களுக்கு கேட்டுள்ளது, அவர்கள் தாக்கூர் மீது இருந்த பயம் காரணமாக போலீசிடம் தெரிவிக்கவில்லை என்று தெரியவந்துள்ளது. இவ்விவகாரத்தில் பீகார் மாநில போலீசும் தாக்கூர் பின்னணி, முன்னாள் அமைச்சர் மஞ்சு வர்மா மற்றும் அவருடைய கணவருடனான தொடர்பு தொடர்பாக முழுவிசாரணையை முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்