தனிமையில் சந்திக்க அழைத்த கள்ளக்காதலன்... காலி இடத்திற்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
உமா ரெயில்வே கேண்டின் ஒன்றில் வேலை செய்து வந்தார்.;
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் சப்லகட்டா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் உமா (வயது 28). இவருக்கும் ஆந்திராவை சேர்ந்த ராமாஞ்சேநயா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து உமா, தனது கணவருடன் ஆந்திராவில் வசித்து வந்தார். இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்.
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தம்பதி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உமா, கணவரை பிரிந்து தனது 2 மகள்களுடன் சப்லகட்டாவில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வந்தார். மேலும் ஒரு மகன் தனது தந்தையுடன் இருந்தார். உமா ரெயில்வே கேண்டின் ஒன்றில் வேலை செய்து வந்தார்.
அப்போது உமாவுக்கும் காஜா உசேன் (28), என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து காஜா உசேன் இரவில் அடிக்கடி உமாவின் வீட்டிற்கு சென்று உல்லாசமாக இருந்து வந்தார். அப்போது உமா, காஜா உசேனிடம் கடனாக பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. காஜா உசேன் உமாவிடம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு வந்துள்ளார்.
இந்தநிலையில், சம்பவத்தன்று இரவு உமாவை தொடர்பு கொண்ட காஜா உசேன் தனிமையில் சந்திக்க அழைத்துள்ளார். அதன்படி, உமாவும் தனது வீட்டின் அருகே உள்ள காலி இடத்திற்கு உமா சென்றார். அங்கு வந்த காஜா உசேன் பணம் கேட்டு தகராறு செய்தார். உமா பணம் இல்லை என்று கூறவே ஆத்திரம் அடைந்த காஜா உசேன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் உமாவின் கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த சப்லகட்டா போலீசார், காஜா உசேனை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், உமாவை அவர் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.