3 வயது மகளுடன் ஏரியில் குதித்து பெண் தற்கொலை: காரணம் என்ன...? - போலீஸ் விசாரணை

குழுந்தை தன்வி, தாய் மதுஸ்ரீயின் உடலை அணைத்த நிலையில் இருந்தது.;

Update:2026-01-06 23:17 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா கொடியால கிராமம் அர்வாரா பகுதியை சேர்ந்தவர் ஹரீஷ். இவரது மனைவி மதுஸ்ரீ(வயது 34). இவர்கள் 2 பேருக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகிறது. இவர்களது மகள் தன்வி(3). ஹரீஷ் தனது தாய், மனைவி மற்றும் குழந்தையுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.

இந்நிலையில், சம்பவத்தன்று இரவு வீட்டில் அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். பின்னர், காலையில் ஹாீஷ் எழுந்து பார்த்தபோது, வீட்டில் மதுஸ்ரீயையும், குழந்தை தன்வியையும் காணவில்லை. இதனால், ஹரீஷ் அவரது உறவினர்களுடன் சேர்ந்து மனைவியையும், குழந்தையையும் கிராமம் முழுவதும் தேடியுள்ளார். அப்போது, அப்பகுதியில் உள்ள ஏரியில் தாயும், மகளும் பிணமாக மிதந்தனர். இதைப்பார்த்து ஹரீசும், கிராம மக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து, அவர்கள் உடனே பெல்லாரே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், அங்கு விரைந்து வந்த போலீசார் ஆய்வு நடத்தினர். பின்னர், அவர்கள் தீயணைப்பு படையினரை வரவழைத்து மதுஸ்ரீயையும், அவரது குழந்தை தன்வியையும் மீட்டனர். அப்போது, மதுஸ்ரீ மற்றும் குழந்தை தன்வி ஆகியோரின் உடல்கள் ஒரே துணியால் உடலில் கட்டப்பட்டு இருந்தது.

மேலும் குழுந்தை தன்வி, மதுஸ்ரீயின் உடலை அணைத்த நிலையில் இருந்தது. இதன்மூலம் மதுஸ்ரீ, தனது குழந்தை தன்வியை தன்னுடன் சேர்த்து துணியில் கட்டிக்கொண்டு ஏரியில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதைப்பார்த்து, அங்கிருந்த அனைவரும் கண்கலங்கினர்.

இதையடுத்து, பெல்லாரே போலீசார் மதுஸ்ரீ மற்றும் தன்வி ஆகியோரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மதுஸ்ரீ தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுஸ்ரீயின் தாய் ரத்னாவதி தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளார். தாய் மற்றும் மகள் ஆகியோர் ஏரியில் பிணமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்