பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களை அளித்த 15 வயது சிறுவன் கைது
சமூக வலைத்தளங்கள் மூலம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் சிறுவன் தொடர்பில் இருந்துள்ளான்.;
சண்டிகார்,
பஞ்சாப் மாநிலம் பதன்கோட்டை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன், பாகிஸ்தானுடன் தொடர்பில் இருப்பதாகவும், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள், ஐ.எஸ்.ஐ. அதிகாரிகள் மற்றும் பயங்கரவாத அமைப்பினர் ஆகியோருக்கு இந்தியாவின் பாதுகாப்பு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்து வருவதாகவும் பஞ்சாப் போலீசுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அந்த சிறுவனை போலீசார் பிடித்து விசாரித்தனர். காஷ்மீரில் வசித்து வந்த அவனுடைய தந்தை ஓராண்டுக்கு முன்பு இறந்து விட்டதும், அவர் கொல்லப்பட்டதாக நினைத்து அவன் மனஉளைச்சலில் இருப்பதும் தெரிய வந்தது. சமூக வலைத்தளங்கள் மூலம் ஓராண்டாக பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்துள்ளான்.
அவனது செல்போனை போன்றே ஒன்றை ‘குளோனிங்’ மூலம் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உருவாக்கினர். இந்தியாவின் பாதுகாப்பு முக்கியத்துவம்வாய்ந்த இடங்களை சிறுவன் தனது செல்போனில் வீடியோ எடுத்தபோது, அவர்கள் ‘குளோனிங்’ மூலம் அங்கிருந்து பெற்றுக்கொண்டுள்ளனர் என்று பஞ்சாப் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.