திருப்பரங்குன்றம் விவகாரம்: தி.மு.க. அரசு இந்து எதிர்ப்பு உணர்வை வளர்க்கிறது - பியூஷ் கோயல் விமர்சனம்
இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நீதித்துறையை அச்சுறுத்த முயன்றனர் என பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார்.;
புதுடெல்லி,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மலையில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபத்திருநாள் அன்று தீபம் ஏற்ற மதுரை ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவிட்டார். ஆனால், தீபத்தூண் அருகே தர்கா இருப்பதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என கூறி தீபம் ஏற்ற தமிழக அரசு மறுத்துவிட்டது.
மேலும், தீபத்தூணில் தீபம் ஏற்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மதுரை ஐகோர்ட்டில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டது.
மேலும், திருப்பரங்குன்றம் தீபத்தூண் வழக்கில் மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், தமிழக அரசின் செயல்பாட்டிற்கு கண்டனங்களை தெரிவித்தனர். அதேசமயம், இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் சுப்ரீம் கோட்டில் மேல்முறையீடு செய்யும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலைகளில் தீபம் ஏற்ற அனுமதித்த சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்ப்பதன் மூலம் தி.மு.க. அரசு இந்து எதிர்ப்பு உணர்வை வளர்ப்பதாக மத்திய மந்திரி பியூஷ் கோயல் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;-
“திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு மாநில அரசு அனுமதிக்காததால் பக்தர்கள் நீதிக்காக கோர்ட்டை நாடினர். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீபம் ஏற்றும் நடைமுறையை அனுமதித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு மேல்முறையீடு செய்தது. இது இந்து விரோத மனநிலையை பிரதிபலிக்கிறது.
‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள் ஜி.ஆர்.சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்யக்கோரி நாடாளுமன்றத்தில் மனு அளித்தனர். பிரியங்கா காந்தி, சுப்ரியா சுலே, ஆ.ராசா, தர்மேந்திர யாதவ் உள்ளிட்ட ‘இந்தியா’ கூட்டணி உறுப்பினர்கள் அனைவரும் இந்து எதிர்ப்பு இயக்கத்தின் முன்னணியில் இருந்தனர். அவர்கள் நீதித்துறையை அச்சுறுத்த முயன்றனர்.
மதுரை ஐகோர்ட்டு கிளை வழங்கிய தீர்ப்பு முருகப்பெருமானின் பக்தர்களுக்கு நீதி வழங்கியுள்ளது. பல நூற்றாண்டுகளாக முருகனுக்கு அங்கு விளக்கு ஏற்றி வைக்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் மலையில் விளக்கு ஏற்ற அனுமதிக்கும் ஐகோர்ட்டு கிளையின் தீர்ப்பை எதிர்ப்பதன் மூலம் தி.மு.க. அரசு இந்து எதிர்ப்பு உணர்வை வளர்க்கிறது.
தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க.வும், தேசிய ஜனநாயகக் கூட்டணியும் இந்த பிரச்சினையை எழுப்பவில்லை. இது எங்களுக்கு அரசியல் பிரச்சினை அல்ல. இது இந்தியாவின் மதச்சார்பற்ற கட்டமைப்பை நிலைநிறுத்துவது மற்றும் இந்தியாவை பிரிக்கும் தி.மு.க. மற்றும் காங்கிரஸின் மனநிலைக்கும் எதிராகப் போராடுவது பற்றியது.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.