வங்காளதேச விவகாரத்தில் அமைதி ஏன்? காசாவுக்கு குரல் கொடுத்தவர்கள் எங்கே? காங்கிரசுக்கு கேரள பா.ஜ.க. கேள்வி
அனைத்து மனித உரிமை அமைப்புகளும் மற்றும் இந்து அமைப்புகளும் இந்த விசயத்தில் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினார்.;
கொச்சி,
வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. இந்த கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களின் முக்கிய தலைவராக இருந்தவர்களில் ஷெரீப் உஸ்மான் ஹாதி (வயது 32) என்பவரும் ஒருவர். இங்குலாப் மாஞ்சா என்ற அமைப்பை நிறுவி அரசியலில் ஈடுபட்டார்.
அவர் துப்பாக்கியால் சுடப்பட்டு, சிங்கப்பூரில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சில நாட்களில் உயிரிழந்து விட்டார். டிசம்பர் மத்தியில் ஏற்பட்ட அவருடைய மரணம் தொடர்ச்சியாக வங்காளதேசத்தில் வன்முறை வெடித்தது. இதன் தொடர்ச்சியாக அந்நாட்டில் சிறுபான்மை சமூகத்தினராக வசிக்கும் இந்துக்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இதில், இந்துக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். கடந்த 3 வாரங்களில் சிறுபான்மை சமூகத்தின் 6-வது நபர் மீது தாக்குதல் நடந்துள்ளது. 3 இந்து தொழிலதிபர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் அவர்களிடையே அச்சமும், பாதுகாப்பின்மையும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த சம்பவங்களில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. விசாரணை நடந்து வருகிறது.
இந்நிலையில், கேரள பா.ஜ.க.வில் மூத்த தலைவராக உள்ள கும்மனம் ராஜசேகரன் இன்று பேசும்போது, காங்கிரஸ் மற்றும் பிற அரசியல் கட்சிகளை கடுமையாக சாடினார்.
வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான கொடுமைகளை பற்றி கவலை கொள்ளாமல் இருப்பது பற்றி வேதனை வெளியிட்டதுடன், அனைத்து மனித உரிமை அமைப்புகளும் மற்றும் இந்து அமைப்புகளும் இந்த விசயத்தில் ஒன்றிணைய வேண்டும் என வலியுறுத்தினார்.
வங்காளதேசத்தில் நாளுக்கு நாள் இந்துக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. காசாவில் இஸ்ரேல் தாக்குதலின்போது, கம்யூனிசத்துடன் தொடர்புடையவர்கள், காங்கிரஸ் மற்றும் பிற அரசியல் கட்சிகள் முன்வந்து எதிர்வினையாற்றின.
ஆனால், வங்காளதேச வன்முறை விவகாரத்தில் அவை ஏன் மவுனம் காக்கின்றன? என கேள்வி எழுப்பினார். எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அம்னெஸ்டி போன்ற சர்வதேச அமைப்புகளும் அமைதியாக உள்ளன. ஏன் வங்காளதேசத்திற்கு ஏதேனும் ஒரு பிரதிநிதியை அனுப்பி வைக்க கூடாது? என கேட்டுள்ளார்.
இந்துக்கள் கொடுமைப்படுத்தும்போது, இதுபோன்ற வளர்ந்து வரும் அமைப்புகள் உள்நோக்கத்துடன் அமைதி காக்கின்றன. இதுபோன்ற கொடுமைகளில் ஈடுபடுவோருக்கு அனைத்து வகை உதவிகளையும் அவர்கள் செய்கின்றார்கள் என குற்றச்சாட்டாகவும் கூறினார்.
இந்துக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை, அனைத்து மனித உரிமை அமைப்புகளும் மற்றும் இந்து அமைப்புகளும் இந்த விசயத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டு அவர்களை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.