கன்னியாஸ்திரி கற்பழிப்பு சம்பவம்; தடை உத்தரவு பகுதியில் பேரணி சென்ற நடிகர் ஜாய் மேத்யூ மீது வழக்கு பதிவு

கேரளாவில் கன்னியாஸ்திரி கற்பழிப்பு சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தடை உத்தரவு பகுதியில் பேரணியாக சென்ற நடிகர் ஜாய் மேத்யூ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

Update: 2018-09-23 13:21 GMT
கோழிக்கோடு,

கேரளாவின் கோட்டயத்தில் உள்ள அருட்கன்னியர் இல்லத்தை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவரை, பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மறைமாவட்ட பேராயர் பிராங்கோ மூலக்கல் (வயது 54) கற்பழித்தாக புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதனை அடுத்து பேராயரை கைது செய்யும்படி மாநிலத்தில் தொடர்ந்து போராட்டம் வலுத்தது.  இதனை அடுத்து கோட்டயம் போலீசார் தீவிர நடவடிக்கையில் இறங்கினார்கள்.  இந்த புகார் தொடர்பான விசாரணைக்கு பிராங்கோ மூலக்கல் நேரில் ஆஜரானார்.

அவரிடம் நடந்த விசாரணை முடிவில் பிராங்கோவை கொச்சி போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், கோட்டயம் நீதிமன்றத்தில் பேராயர் மூலக்கல் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள 2 நாட்கள் அனுமதித்து நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.  அதன்படி பிராங்கோ செப்டம்பர் 24ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்படுவார்.

இந்த நிலையில், பேராயர் மூலக்கல்லை கைது செய்ய கோரி போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவாக நடிகர் ஜாய் மேத்யூ கடந்த 12ந்தேதி புதுப்பிக்கப்பட்ட மிட்டாய் தெருவில் பேரணியாக சென்றார்.

இந்த பகுதிக்குள் நுழைய தடை உத்தரவு அறிவிக்கப்பட்டு இருந்தது.  ஆனால் விதிகளை புறந்தள்ளி மேத்யூ மற்றும் பலர் பேரணியாக சென்றுள்ளனர்.

இதனை அடுத்து அவர்கள் மீது சட்டவிரோத முறையில் கூடுதல், அமைதியை குலைத்தல், கலகம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுபற்றி மேத்யூ செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நாங்கள் வாசகங்கள் அடங்கிய அட்டைகளுடன் அமைதி பேரணி ஒன்றை நடத்தினோம்.  போராட்டத்தில் ஈடுபட்ட கன்னியாஸ்திரிகளுக்கு ஆதரவு தெரிவித்ததற்காக என்னை பயமுறுத்தும் முயற்சி இது என அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்