புயலில் சிக்கிய இந்திய கடற்படை அதிகாரி 16 மணி நேரத்திற்குள் மீட்கபடுவார் நிர்மலா சீதாராமன் தகவல்

உலகை சுற்றும் பந்தயத்தின்போது புயலில் சிக்கிய இந்திய கடற்படை அதிகாரி 16 மணி நேரத்திற்குள் மீட்கபடுவார் என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-24 07:45 GMT
புதுடெல்லி,

கடல் வழியாக உலகைச் சுற்றி வரும் ‘கோல்டன் குளோப்’ சர்வதேச பந்தயம் கடந்த ஜூலை 1-ந் தேதி தொடங்கியது. இதில் இந்தியா சார்பில் கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமி பங்கேற்றார். ‘துரியா’ என்று பெயரிடப்பட்ட படகு மூலம் கடந்த 84 நாட்களில் 10,500 நாட்டிக்கல் மைல் தூரத்தை கடந்து தெற்கு இந்திய பெருங்கடலில் வந்து கொண்டிருந்த டோமி, திடீரென புயலில் சிக்கினார்.

மோசமான வானிலையுடன் சுமார் 14 அடிக்கு அலைகள் எழுந்து டோமியின் படகை அலைக்கழித்தன. இதில் படகில் சிக்கிக்கொண்ட அவருக்கு முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் படகை விட்டு அவரால் நகர முடியவில்லை. மேலும் 130 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசியதால் அவரால் படகையும் செலுத்த முடியவில்லை.

இதைத்தொடர்ந்து தன்னை காப்பாற்றுமாறு பந்தய ஏற்பாட்டாளர்களுக்கும், இந்திய கடற்படைக்கும் நேற்று அவர் தகவல் அனுப்பினார். அதன்பேரில் மொரீஷியசில் இருந்து இந்திய கடற்படை விமானம் புறப்பட்டு அவரை தேடியது. இதில் ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இருந்து 1,900 நாட்டிக்கல் மைல் பகுதியில் டோமியின் படகு கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கடற்படைகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் இந்திய கடற்படைக்கு சொந்தமான 2 கப்பல்கள் மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் ஒன்றும் டோமியை மீட்க விரைந்துள்ளன.

இந்தநிலையில்,  மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

காயமடைந்த கடற்படை அதிகாரி அபிலாஷ் டோமியை மீட்கும் பணியில் பிரெஞ்ச் கப்பல் ஓசிரிஸ் விரைந்துள்ளதாகவும், அடுத்த 16 மணி நேரத்திற்குள் மீட்கப்படுவார் என்று குறிப்பிட்டுள்ளார். 

மேலும் செய்திகள்